Tuesday 17 April 2007

வலைப்பதிவுகளுடனான எனது அறிமுகம்-1

ஏதாவது எழுத வேண்டுமென்றால் முதலில் இந்த வலைப்பதிவுகள் எனக்கு எப்படி அறிமுகமாயின எனபதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். இப்போது நான் எழுதும் எதையும் நான் எந்த ஒரு திரட்டியிலும் இடுவதாக இல்லை. வேறொரு நாளில் இட்டாலும் இடுவேன். புத்தகங்கள் படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். ஆர்வம் இருக்கும் அளவுக்கு நான் அதிகம் படித்ததில்லை. இதனால் நான் இணையத்தில் படிக்க முயற்சி செய்தேன். அப்போது தமிழ் சிஃபி எனக்கு அகப்பட்டது . அதில் நான் நேசக்குமாரின் "முனிச்" திரைப்பட விமர்சனம் படித்தேன். பிளாக்குகளைப் பற்றி ஒரு முறை தினமலரில் செய்தி படித்திருக்கிறேன். ஆனால் எப்படி பிளாக்குகளை அணுகுவது என்று எனக்கு புரியவில்லை. அதனால் அப்படியே விட்டு விட்டேன். நேசக்குமாரின் பிளாக்கைப் பார்த்த பிறகு பிளாக்குகளை மும்முரமாக தேட ஆரம்பித்தேன். ஒருவரின் பெயரில் இணையப் பக்கம் இருப்பது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ஆனால் நேசக்குமாரின் பக்கங்களையும் நான் அதிகம் படிப்பதில்லை. காரணம் அதில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை பிரவுசிங் சென்டர்களில் திறந்து படிப்பது எளிதாக இல்லை. இப்படி நான் தேடிக்கொண்டிருக்கும் போது எனக்கு தமிழ்.நெட் மாட்டியது. அதுவும் எனக்கு போதுமானதாக இல்லை. அதன் பின் சில சுட்டிகளின் மூலம் எனக்கு தமிழ்மணத்தைப் பற்றி தெரிய வந்தது. அதன் பிறகு நான் வேறொரு உலகத்துக்கு வந்தது போல உணர்ந்தேன். இப்போது நான் முற்றிலும் தமிழ் மணத்திலேயே மூழ்கி கிடக்கிறேன். விவாதங்களைப் படிப்பதிலேயே நான் அதிக நேரம் செலவிடுகிறேன். அனானியாக சில பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன். அதற்கு முன்பே நான் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி விட்டாலும் ஏதும் எழுதவில்லை. இப்போது அதை முற்றிலும் அழித்து விட்டு இந்த பதிவை தொடங்கி இருக்கிறேன். எனது உணமையான பெயரில் எழுத முடியாததற்கு உணமையில் நான் வருந்துகிறேன். என்ன செய்வது உண்மையான பெயரில் எழுதுவதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நான் வேண்டாமென்று நினைத்தாலும் (வேண்டாமென்று நிச்சயம் நினைக்கவில்லை) எப்படியும் ஏதாவது ஒரு விவாதத்தில் மூக்கை நுழைத்து விடுவேன். அதன் பின் பல வசைகளை வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு பயந்தவன் ஏன் வலைப்பதிய வேண்டும் என்று கேட்கிறீர்களா? பயந்தவன் வலைப்பதிவில் எழுதாமல் நேரடியாகவா விவாதம் செய்ய முடியும். விவாதங்களில் எப்போது கலந்து கொளவது? இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்னும் நான் என்னை நிறைய தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக நான் விவாதங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தால் நான் முற்றிலும் தயாராகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. யாராவது என்னை கிணற்றுக்குள் தள்ளி விட்டால் கூட நான் கிணற்றுக்குள் குதிக்க வாய்ப்பிருக்கிறது. எப்போது நான் தயார் ஆவேன். என் மொழி நடையை மேம்படுத்திக்கொள்ளும் வரை (அதாவது நான் நினைக்கிறதை நான் நினைத்தபடி எழுதும் வரை) நான் கிணற்றுக்குள் குதிப்பதாக இல்லை.(இந்த பதிவு இத்துடன் முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது இதிலேயே சிலவற்றை சேர்ப்பேன். )