Friday 13 July 2007

நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும்

வேலு குடும்பத்தினருடன் அந்த வீட்டுக்கு குடிவந்தபோது அக்கம் பக்கத்து வீடுகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. நாங்களும் இன்னும் சில குடும்பங்களுமே இருந்தோம். எங்க அப்பாவின் அலுவலகத்திலேயே அவரும் வேலை செய்ததனால் மற்றவர்களைவிட நாங்கள் கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தோம். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் பிரியா. என் தம்பி வயது. இரண்டாமவள் ஜான்சி. என் சித்தி பெண் வயது. கைக்குழந்தை. ரொம்ப அழகு. ஆனால் அந்த குழந்தையைவிட அடுத்த வீட்டு ஜெயந்தியையே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால் ஜான்சி கருப்பு. ஆனால் இரண்டு குழந்தைகளையும் பார்த்தால் கொஞ்சாமல் போக மாட்டேன். அவர்கள் வீட்டு அரிசியின் நடுவில் செந்நிறத்தில் ஒரு கோடு இருக்கும். அவர்கள் நிலத்தில் விளைந்தது அப்படித்தான் இருக்கும் என்றார்கள். அவர்கள் அம்மாவை பார்க்கும்போது எனக்கு நடிகை ரேவதிதான் எனக்கு நியாபகம் வரும். ஆனால் என்ன கொஞ்சம் கருப்பு. அக்கம்பக்கத்தில் எங்க அம்மா மட்டுமே அவர்கள் வீட்டுக்கு போய் பேசுவார்கள். மற்ற வீட்டுப்பெண்கள் யாரும் போவதில்லை. வேலுவின் மனைவி கொஞ்சம் அதிரடியாக பேசக்கூடியவர். ரொம்ப நாகரீகம். ஒரு முறை நான் வீட்டு வாசலில் டவுசரைத் தூக்கு ஒண்ணுக்கு போய்க்கொண்டிருந்தபோது வீட்டுக்குப் போடா. வீட்டுலதான் கக்கூஸ் இருக்குல. இவ்வளவு வளந்திருக்க அறிவில்ல என்று திட்டியதற்கு பின் நான் பொதுவிடங்களில் ஒண்ணுக்குப் போக கூச்சப்பட ஆரம்பித்தேன். இப்படி எனக்கு எங்க அம்மா எப்போதும் நாகரீகம் கற்றுத்தந்ததில்லை.
பிரியாவும், ஜான்சியும் எங்க வீட்டுக்கே டிவி பார்க்க வருவார்கள். பக்கத்தில் ஒரு இஸ்லாமிய வீட்டுக்கு டிவி பார்க்கப் போனபோது அவர்கள் ஜாதியை சொல்லி திட்டி விட்டார்கள். அதிலிருந்து அங்கு போவதில்லை. பிரியா என்னை உரசிக்கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்து டிவி பார்க்கும். எனக்கு அது ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு ஆண்டு விடுமுறைகளில் சித்தப்பா வீட்டுக்கு வரும் தர்ஷினியையே பிடிக்கும். தேவதையை போல் இருப்பாள். மற்ற குழந்தைகள் எல்லாருக்கும் தர்ஷினியின் கவனத்தை கவருவதிலேயே விருப்பம் இருக்கும் எனக்கும்தான். அப்போது விளையாட்டுக்களில் பிரியா தனித்தே இருப்பாள். எனக்கு பாவமாக இருந்தாலும் அப்போதைய ஆர்ப்பாட்டத்தில் பரிதாபப்படக்கூட நேரம் இருக்காது. எங்க அம்மாவுக்கு தர்ஷினியை ரொம்ப பிடிக்கும். தாயில்லாப்பெண் என்பதால் கொஞ்சம் கூடுதல் பரிவு. தர்ஷினிக்கும் எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும். அந்த குடியிருப்பில் அவளிடம் அவ்வளவு பரிவாக இருப்பது எங்க அம்மா மட்டுமே. அதை அவளே சொல்லியிருக்கிறாள். தர்ஷினி போன பிறகு அவளைப்போலவே பிரியா பேசுவாள். எனக்கு எரிச்சலாக வரும்.
பிரியா வீட்டுக்கும் மற்றவர்களுக்கும் எப்போது சண்டை வந்து எப்போது பேசுவதை நிறுத்தினார்கள் என்றெல்லாம் எனக்கு நினைவில்லை. நாங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அதனால் எங்க வீட்டாரிடம் அவ்வப்போது குற்றம் குறை காண ஆரம்பித்தார்கள். ஒரு விடுமுறைநாள் மதியம் எல்லா குழந்தைகளும் தூங்கிகொண்டிருந்தார்கள். நான் ஒற்றை ஆளாக பந்தை தூக்கிப்போட்டு கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். ஒரு அடி. ஏதோ நடக்கக்கூடாதது நடக்க போகிறதென்று என் உள் மனது சொல்லியது. நடந்தே விட்டது. எங்கள் குடியிருப்பில் எங்களுக்கு அடுத்திருந்த வீட்டின் சன்னல் கண்ணாடி உடைந்து விட்டது. உடைத்து விட்டு எங்கள் வீட்டு கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டேன். எங்க அம்மா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்கிறார்கள் என்னடா செஞ்சிட்டு வந்த என்று. சன்னல் கண்ணாடியை உடைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது உங்களுக்கு தெரியாது. அதற்கு நீங்கள் பன்னிரண்டு வயதுக்கு திரும்ப வேண்டும். என் அம்மாவின் கற்பு, என் அப்பாவின் ஆண்மை பற்றிய குறுக்கு விசாரணைகளெல்லாம் எதிர்த்த வீட்டு பதினான்கு வயது பையன் செய்வான். அந்த சமர் ஒரு வாரம் நீடித்தது. நான் வீட்டில் இல்லாதபோதே சண்டை நடக்கும். நான் இருந்தால் மட்டும் என்னவோ கிழித்துவிடுவதைப்போல.
எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. நான் சன்னல் கண்ணாடியை உடைத்தது அவர்களுக்கு ஒரு சாக்கு மட்டுமே என்று. அதன் பிறகு அந்த குடியிருப்பில் யாரும் எங்களுடன் பேசவில்லை. எங்களுக்கு வேலுவின் வீடே துணை. வேலுவின் மனைவி எதற்கும் கலங்கியதாக எனக்கு நினைவில்லை. அண்டை வீட்டார் பேசாதது அவர்களிடம் எத்தகைய வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நாங்களே நொந்து போயிருந்தோம். கொஞ்ச நாளில் வேலு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வீடு கட்டி குடிபோய்விட்டார். குடிசைகள் உள்ள இந்த இடத்தில் ஏன் குடி போனார்கள் என்று எனக்கு புரியவில்லை. என் அம்மாவோ அப்பாவோ அது பற்றி ஒரு கேள்வி கூட அவர்களை கேட்கவில்லை.
அவர்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு இன்னொரு குடும்பம் குடிவந்தது. அந்த குடும்பத்தில் அம்மா மட்டுமே கறுப்பு. மற்றவர்கள் எல்லாம் சிவப்பு. அதிலும் குட்டிப்பையன் ரொம்ப அழகு. இந்த முறை அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளும் வயது வந்துவிட்டது. அந்த வீட்டுக்கு இனி தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டவர்களே வருவார்கள் என்பதும் எனக்கு புரிந்து விட்டது. வேலுவின் மனைவியைப் போலவே இந்த குடும்பத்தலைவரும் ரொம்ப அதிரடி. இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. இப்போது பிரியா எதோ பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்து விட்டாளாம். வேலு மாரடைப்பில் இறந்துவிட்டாராம்.

*************************************************************

எப்படி பெண் வேண்டும் என்று கேட்கிறார்கள்
என் தோளில் சாய்ந்து ஒரு பூனையைப் போல உறங்கும் பெண் வேண்டாம்
என் மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு
என் கைகளை சிறைப்படுத்தி
வெற்றிச்சிரிப்பு சிரிக்கும் தேவி வேண்டும் என்று
எப்படி சொல்வேன்.

*************************************************************

உங்கள் குதிரைகளை விட்டுவிட்டு வாருங்கள்
ரதயாத்திரை போகலாமென்கிறீர்கள்
குதிரைகளுடன் குதிரை ஊர்வலம் போகலாமென்றேன்
காமெடி கீமெடி பண்ணலையே என்கிறீர்கள்

என்னைப் போல உடை உடுத்திக்கொண்டு வா
விருந்துக்கு போகலாமென்கிறீர்கள்
நேற்று தனிமையில் நீங்கள்
நன்றாக இருக்கிறதென்று சொன்ன
என் உடைகளை என்ன செய்வது என்று கேட்டால்
கோபம் வருகிறது.

எனக்குத் தெரியாமல்
என் பூசையறையில் எடுத்த
ரோசமலரை சட்டையில் செருகிக்கொண்டீர்கள்
விருந்தில் யாராவது அதைப் பற்றி பேசினால்
உங்களுக்கு பிடிப்பதில்லை