Saturday 7 February 2009

கண்கள் பனித்தன. இதயம் இனித்தது

ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் இதே இலண்டனில்  நண்பர்களுடன் தங்கி இருந்தபோது  நண்பன் ஒருவன்  கைலியை மடித்துக்கொண்டே சற்று மெதுவான் குரலில் என்னிடம் சொன்னான் "இலங்கைத்தமிழர்களுக்கு நம்ம ஓரளவுதான் ஹெல்ப் பண்ண முடியும். தெரியுதா?"  இதன் பொருள் எளிதானது. நான் இலங்கை செய்திகளை அதிக அக்கறையுடன் படிப்பது தவறென்கிறான். எனக்கு அறிவுரை சொல்கிறான். நான் அப்போது பதில் எதுவும் சொல்லவில்லை.
 
இப்போது அவன் சென்னையில் இருக்கிறான்.
 
கொஞ்ச நாள் முன்பு அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.  ஈழம் வரலாறு என்று தலைப்பிட்டு ஈழ வரலாறு குறித்த பிடிஎஃப் கோப்பு ஒன்று.  அதை வரலாறு முக்கியம் அமைச்சரே என தலைப்பிட்டு நான் ஒரு சுற்று அனுப்பினேன்.
 
இன்று அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். இலங்கையின் இன்றைய போர் நிலவரம் என்ன. புலிகள் வெல்வார்களா என்று கேட்டு. நான் தமிழ் சசியின் "கிளிநொச்சி ஒரு போரியல் பார்வை"யை அனுப்பி வைத்தேன். அதை TIFF கோப்பாக மாற்றி நிறைய பேருக்கு அனுப்பியிருக்கிறான். எனக்கும் ஒரு நகல் வந்தது.
 
எப்படி வந்தது அவனில் இந்த மாற்றம்?
 
தமிழ் சசியின் இடுகை ஒன்றிற்கு  நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். தமிழகத்தமிழர்களை அக்கறை கொள்ள வைக்க புலி ஆதரவெல்லாம் கோசமெல்லாம் தேவையில்லை. செய்திதான் இப்போதைய தேவை. அந்த மக்கள் படும் துன்பங்களைப் பற்றிய செய்தி மட்டுமே போதும்.  அதை சுவரொட்டிகள் மூலமோ அல்லது துண்டு பிரசுரங்கள் மூலமோ செய்ய்லாமென்று. அதையே சமீபத்தில் கதிர் சயந்தனும் சொல்லியிருந்தார்.   இப்போது அதுதான் நடந்திருக்கிறது. சற்று தாமதாகவென்றாலும்.
 
ஏனென்றால் ஒரு படுகொலை(வங்காலை) செய்தியை தற்செயலாக இணையத்தில் படிக்கப்போய்தான் நான் இலங்கை விவகாரங்களில் ஆர்வம் காட்டத்தொடங்கினேன். பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். முற்றிலும் தலைகீழான ஒரு கருத்துநிலைக்கு வந்தேன்.