Tuesday 2 October 2007

தூண்டப்பட்ட திரிவிளக்கு

ஓசை செல்லாவும் சுப்பையா வாத்தியாரும் ஏதோ கடவுளைப்பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் இந்த இடுகையை படித்ததனால் எனக்கு அப்படித் தோன்றுகிறது. மிகவும் குறைவான வேகம் உள்ள இணைய இணைப்பு என்பதனால் இது சம்மந்தமான அனைத்து இடுகைகளையும் படித்துப் புரிந்து கொள்ள நேரமில்லை மன்னிக்கவும்.

நான் இணைய இணைப்பு இணைப்பு இல்லாத இந்நேரத்தில் கொஞ்சம் நேரமே கிடைத்திருப்பதாலும் கிடைத்த நேரத்தை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலினாலும் அவசர அவசரமாக எழுத ஆரம்பிக்கிறேன். எனவே என்னால் எந்த பதிவுகளிலிருந்தும் மேற்கோள் காட்ட முடியாது மேலும் இது அந்த ஓர் இடுகையைப் படித்ததனால் தூண்டிவிடப்பட்ட என் சிந்தனை அவ்வளவுதான்.
எனக்கு விடை தெரியாத சில கேள்விகள் ரொம்ப நாட்களாகவே உண்டு. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமென்றிருக்கிறேன்.

முதல் கேள்வி
எனக்கு என்ன நிறமெல்லாம் என்ன நிறமாக தெரிகிறதோ அது எல்லோருக்கும் அதே நிறமாகத்தான் தெரிகிறதா? புரியவில்லையா? இருங்கள் கொஞ்சம் தெளிவாகக் குழப்புகிறேன்.
இப்போதைக்கு இரண்டு நிறத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். நான் பிறந்ததிலிருந்து ஒரு நிறத்தை சிவப்பு என்றும் இன்னொரு நிறத்தை பச்சை என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
(கொஞ்சம் நிறுத்திப் படிக்கவும்) இன்னொருவருக்கு அவர் பிறந்ததிலிருந்து நான் சிவப்பு என்று நினைத்துக்கொண்டிருந்த பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம் பச்சை நிறமாகத் தெரிகிறது. ஆனால் அவருக்கு அது சிவப்பு நிறம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என்னுடைய பச்சை நிறமெல்லாம் அவர் கண்களுக்கு சிவப்பாகத் தோன்றுகிறது. அது அவருக்கு பச்சை நிறம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது எனக்கு சிவப்பு நிறமாகவும் அவருக்கு பச்சை நிறமாகவும் தோன்றுவதெல்லாம் இருவரின் வார்த்தைகளிலும் சிவப்புதான். ஆனால் இருவரின் பார்வைகளிலும் வேறு வேறு. இதையே எல்லா மனிதர்களுக்கும் யோசிப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் தெரிகிறது. ஆனால் பெயர்கள் மட்டும் ஒன்று. இப்படியிருந்தால் எப்படி இருக்கும்? இது என் கற்பனைதான்.இது பொய்யாகவும் இருக்கலாம் உண்மையாகவும் இருக்கலாம். இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது. இதை பொய்யென்று எப்படி நிரூபிப்பது?

சரி இருக்கட்டும் இப்போது இரண்டாவது கேள்வி
நேற்றைய ஒரு மில்லிமீட்டரும் இன்றைய ஒரு மில்லிமீட்டரும் உண்மையில் ஒரு மில்லிமீட்டர்தானா?
சரி சரி திரும்பவும் பழையபடி தெளிவாகக் குழப்புகிறேன்.
நேற்று ஒரு பொருள் அளக்கப்படுகிறது. அப்போது அது ஒரு மில்லி மீட்டர் இருக்கிறது. அதன்பின்பு எல்லாப்பொருட்களும்(உயிருள்ளவை உயிரற்றவை அனைத்தும்) மெதுவாகவும் சீராகவும் வளர்கின்றன. அடுத்த நாள் எல்லாப் பொருட்களும் கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்துவிட்டன என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த அளக்கப்பட்ட பொருள் நேற்றைவிட பெரியதாக இருக்கிறது.

எல்லாப்பொருட்களும் வளர்ந்திருப்பதால் நேற்று அளக்கப் பயன்படுத்திய அளவுகோலும் வளர்ந்திருக்கும். எல்லாமும் சீராக வளர்ந்திருப்பதால் அளவுகோல் இப்போதும் ஒரு மில்லிமீட்டர்தான் காட்டும். ஆனால் இன்றைய ஒரு மில்லிமீட்டர் நேற்றைய ஒரு மில்லிமீட்டரைவிடப் பெரியது. அப்படி தினமும் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒரு மில்லி மீட்டர் என்பது ஒரே நீளத்தில் எப்போதும் இருப்பதில்லை. ஆனால் நாம் அளந்தால் எப்போதும் நமது அளவுகோல் ஒரு மில்லிமீட்டர்தான் காட்டுகிறது.

இது உண்மையா? பொய்யா? இதை உண்மையென்றோ பொய்யென்றோ எப்படி நிரூப்பிப்பது? இதுவரை இது உண்மையென்று நிரூபிக்கப்படாததால் இது பொய்யென்று சொல்ல முடியுமா?

மூன்றாவது கேள்வி
இந்த கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். பலதடவை பலரால் கேட்கப்பட்டக் கேள்விதான்.

காலம் எப்போது ஆரம்பித்தது? ஆரம்பிக்கும் முன்னால் எதாவது காலம் இருந்திருக்குமே. அப்படியிருந்திருந்தால் காலம் என்பது தொடங்கியிருக்கவே வாய்ப்பில்லையல்லவா? அதேபடி காலம் முடியவும் வாய்ப்பில்லை. சரி ஏதொவொன்று இருக்கிறதென்றால் அது கண்டிப்பாகத் தொடங்கிதானே இருக்கவேண்டும்? தொடங்காமலே எப்படி ஒன்று இருக்கமுடியும்?


இது சம்மந்தமான ஒரு கிளைக்கேள்வி.
உலகில் அசைகின்ற அனைத்தும் அனைத்து அசைவுகளையும் நிறுத்திவிடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதாவது மூளையும் தனது செயல்பாட்டை நிறுத்திவைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட ஐந்துநாட்கள் இப்படி நிற்கின்றன. பிறகு மறுபடியும் இயங்க ஆரம்பிக்கின்றன.
இப்போது உலகில் எல்லாக்கடிகாரங்களும் நின்ற நொடியிலிருந்து இயங்க ஆரம்பிக்கின்றன. உலகின் எல்லா மூளைகளும் விட்ட இடத்திலிருந்து சிந்திக்க ஆரம்பிக்கின்றன.

அப்படியானால் கடிகாரங்களின்படியும் உயிரினங்களின் உணர்வுகளின்படியும் நின்றுபோன அந்த ஐந்து நாட்கள் கணக்கில் வரவே வராது.
இப்படி ஒன்று உண்மையில் நிகழ்ந்திருக்குமானால் அதை எப்படி நிரூபிப்பது?

இதுவரை எப்படி நிரூபிப்பது எப்படி நிரூபிப்பது என்று நிறைய முறைக் கேட்டுவிட்டேன். இப்போது நேரடியாக நான் சொல்ல வருவதை சொல்கிறேன்.

அதாவது
நாம் புரிந்துகொள்வது எதையும் எதாவது ஒன்றுடன் ஒப்பிட்டே புரிந்துகொள்கிறோம்.
நாம் அளக்கும் எதையும் எதாவது ஒன்றுடன் ஒப்பிட்டே அளக்கிறோம்.
தெளிவாக சொல்வதானால் பகுத்தறிவென்பது ஒப்பிட்டு அறிவது நாம் கண்டுபிடிக்கிறது எதையும் உண்மையில் கண்டுபிடிப்பதில்லை. வெறும் பெயர் மாத்திரமே வைக்கிறோம்.
நாம் ஒப்பிட்டு அறிந்துகொள்ளுவதற்கு பயன்படுத்தியவற்றையெல்லாம் வரிசைப்படுத்திக்கொண்டே போனால் ஒப்பிடாத முதற்பொருள் ஒன்று எல்லா அளவைக்கும் இருக்குமல்லவா? அதாவது நம்முடைய அறிந்துகொள்ளும் அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இயங்குகிறது. ஆனால் அதற்கும் மேலே அறிந்துகொள்ள முடியாத எதோ ஒன்று அல்லது பல இருக்கின்றன.
அதாவது ஏதோ ஒன்று அல்லது பல எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது அல்லது தானே இயங்க விடுகிறது. அதை கடவுள் என்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். ஏனென்றால் நாம் பெயர் மட்டுமே வைக்கிறோம்.
ஒருமுறை நண்பர்களுக்குள் பேய் பிசாசைப்பற்றி ஒரு விவாதம் நடந்தது. என்னிடம் ஒருவன் கேட்டான். "பேயை நம்புகிறாயா?". நான் சொன்னேன் "கடவுள் என்று இருப்பதாலேயே பேயென்று ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே பேயென்று ஒன்று இருந்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்."
எல்லோரும் என்னை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. மீதி ஒயினைக் குடிக்க ஆரம்பித்தேன்.
சரி என்ன சொல்லவருகிறாய் என்று கேட்கிறீர்களா? நான் எப்போதோ சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன் அல்லது சொல்லிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன். யாராவது பின்னூட்டத்தில் உதவுங்கள்.