Sunday 26 August 2007

நான் எழுத நினைத்திருப்பவை

நான் இந்த வலைப்பதிவுலகில் ஒரு பதிவை ஆரம்பித்து ஒரு பதிவராக நுழைந்து எட்டு மாதங்களுக்கு மேலானபோதும் இன்னும் என்னை ஒரு பதிவராக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. நான் இன்னும் ஒரு வாசகனாகவே நீடிக்கிறேன். அவ்வாறு நீடிப்பதையே தற்போதைக்கு விரும்புகிறேன். ஆனாலும் எல்லா புதியவர்களைப்போல எனக்கும் பதிவெழுத ஆசை இருக்கிறது. இப்போதைக்கு நான் தயங்குவதற்கு எனக்கு இன்னும் சரியான மொழிநடை அமையப்பெறாததும், இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே காரணம். மேலும் எழுதுவதில் உள்ள சோம்பேறித்தனம் இன்னொரு காரணம் ஆகும். நான் இந்த வலைப்பதிவுகளை மேயத்தொடங்கியபிறகு நிறைய விசயங்களை எழுத நினைத்து எழுதாமல் இருந்திருக்கிறேன். சிலவற்றை ஆரம்பித்து பாதி எழுதி வைத்திருக்கிறேன். மீதியை முடித்து வெளியிட எண்ணம் இருக்கிறது. அதற்கு சிலகாலம் பிடிக்கலாம். இன்னும் சில விசயங்களை தலைப்பு மட்டும் யோசித்து வைத்திருக்கிறேன். அவற்றையும் என்றாவது ஒரு நாள் எழுதுவேன். அவை என்ன என்ன என்பதை சொல்வதற்காக இந்த இடுகையை எழுதுகிறேன்.

1. தன்னந்தனியே ஒரு பயணம்: பக்கத்திலிருக்கும் மதுரையில் சித்தப்பா வீட்டில் சில மாதங்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது என் அப்பா மதுரை வந்து என்னை விட்டுவிட்டுபோனார். பொற்றாமரைக் குளத்தருகே இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கையில் கொடுத்துவிட்டு கண்கலங்கியபடியே பாத்து இருந்துக்கப்பா என்று சொல்லி விட்டு கிளம்பினார். இப்படி 21வயதிலும்கூட இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கே தனியாக போய்வரத்தெரியாமல் இருந்த நான் லண்டனுக்கு தன்னந்தனியாக போய்வந்தேன். என்னளவில் இது ஒரு பெரிய விசயம். பொன்ஸைப்போல நானும் லண்டன் போன புதிதில் கருப்பர்களைப் பார்த்து பயந்தேன். இவ்வாறு எனது இலண்டன் பயண அனுபவங்களை எழுத நினத்திருக்கிறேன். விரைவில் எழுதுவேன். மேலே உள்ள வரிகளைப் படிக்கும்போது நான் மிகவும் அப்பாவி ஒன்றும் தெரியாதவன் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். அது முற்றிலும் உண்மையில்லை. நான் அதிக அளவில் கூச்ச சுபாவம் உள்ளவன். இருந்தபோதிலும் சராசரி இளைஞர்களைப் போன்று எல்லா நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களை உடையவன். எல்லா சேட்டைகளும் செய்தவன். அவை எல்லாம் நண்பர்களுடன் இருக்கும்போது மட்டுமே.

2. தலைப்பு இன்னும் யோசிக்கவில்லை. போன வாரத்துக்கு முந்தைய வாரம் பரபரப்பாக இருந்த பெயரிலி (எதிர்) மாலன் சர்ச்சையில் எனது புரிதலை பாதி எழுதிவைத்திருக்கிறேன். இது தேவையா என்ற கேள்வி எழக்கூடும். இந்த விசயத்தைப்பற்றி யோசித்துக்கொண்டே ஊருக்கு கிளம்பியபோது பயண நேரத்தில் எனக்குத்தோன்றிய கருத்துக்கள் சற்று நன்றாக இருப்பதாக எனக்கு தோன்றியதால் இதை எழுத ஆரம்பித்தேன். இது போன்ற விசயங்களில் கருத்து சொல்லக்கூடிய அளவு நான் முதிர்ச்சி அடையவில்லைதான். எனினும் இது ஒரு எழுதிப்பழகும் முயற்சி என்ற அளவில் எழுதி வைத்திருக்கிறேன்.

3. நான் ஏன் இந்து: இப்படி ஒரு தலைப்பை நினைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்கே பெரும் தயக்கமாக இருக்கிறது. அந்தளவிற்கு வலைப்பதிவுலகில் செல்வாக்கு பெற்றவர்கள் மத்தியில் இந்து மதத்தின் மீது வெறுப்பு நிலவுகிறது. எனக்கு நினவில் இருக்கிறபடி நான் ஏழாம் வகுப்பில் பரிணாம வளர்ச்சி பற்றிய பாடம் படிக்கிற வரை தெய்வ நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தேன். அந்த பரிணாம வளர்ச்சி பற்றிய பாடமே, நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படக்காரணமாக அமைந்தது. இது நேரடியாக இந்து மதத்தில் நம்பிக்கை ஏற்படுவதற்கான காரணம் இல்லையென்ற போதிலும் எதாவது ஒரு சாமியை கும்பிடுவதற்கான ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர் நான் படித்த விவேகானந்தரின் புத்தகங்கள் எனக்கு இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றை ஏற்படுத்தின. அவர் விளக்கியிருந்த அத்வைதம் என்ற தத்துவத்தின் மீது மிகுந்த மதிப்பு உண்டாகியது. எனக்கு இப்போது அந்த அத்வைத தத்துவங்களின் மீதும் விமர்சனம் உள்ளது. அதைப்பற்றியும் இந்த கட்டுரையில் எழுதலாமென்றிருக்கிறேன். மேலும் நான் சைவம் தமிழர்களின் மதம் என்றும் நம்புகிறேன். இந்து மதத்தின் தெய்வங்கள் எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்ற கற்பனையையும் எழுத இருக்கிறேன். சொக்கனும், முருகனும் பாண்டிய மன்னர்கள் என்று நான் நம்புகிறேன். முதலில் மன்னர் வழிபாடு என்பதில் ஆரம்பித்து பின்னர் அவர்கள் பெருந்தெய்வங்களாக ஆகியிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். இது நான் படித்தவைகளை வைத்து எனக்குத்தோன்றுபவைகளேயன்றி இதற்கு என்னால் சரியான தரவுகளை தர இயலாது. நான் இப்போதும் கோவில்களுக்கு அதிகம் போவதில்லை. அதிகம் கடவுளைத்தொழுவதுமில்லை. அத்வைதமே ஒரு நாத்திக கோட்பாடு என்று நம்புகிறேன். எல்லாமும் எல்லோரும் கடவுள் எனும்போது கடவுள் என்ற ஒன்று தனியாக இல்லையென்றும் நம்புகிறேன். ஆத்மா அழிவற்றது என்ற கோட்பாடு எனக்கு சரியானதாகப் படவில்லை. இந்து மதத்தை நம்புகிறேன் என்று சொல்வதாலேயே நான் ஒரு வலதுசாரி என்றும் பார்ப்பனனென்றும் விமர்சனம் தோன்றக்கூடும். நான் பார்ப்பனனுமில்லை. வலதுசாரியுமில்லை. வலதுசாரிகளின்மீதும் எனக்கு நிறைய விமர்சங்களுண்டு. இதைப்பற்றி விரிவான இடுகையோ இடுகைத்தொடரோ எதிர்காலத்தில் எழுதும் எண்ணமிருக்கிறது.

4. என்னைக்கவர்ந்த பதிவர்கள்: இதில் அசைக்க முடியாத முதலிடத்தில் அய்யா இராம.கி அவர்கள் இருக்கிறார்கள். அவரைத்தொடர்ந்து குமரிமைந்தன், தமிழ் சசி, தருமி ஐயா, திரு, மாலன், பத்ரி, தங்கமணி, அபு முஹை, பெயரிலி, முகமூடி, நண்பன் ஷாஜி, மிதக்கும்வெளி சுகுணாதிவாகர், செல்வநாயகி மற்றும் பலர் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய இடுகை ஒன்றும் எழுத இருக்கிறேன்.

5. என் ஈழநிலைப்பாடு: இதே தலைப்பிலோ அல்லது வேறு எதாவது ஒரு தலைப்பிலோ எனது ஈழநிலைப்பாட்டை எழுத இருக்கிறேன். நான் தொடர்ச்சியாக தினமலரையும், துக்ளக்கையும் படித்து வந்ததால் எனக்கு விடுதலைப்புலிகளின் மீது ஒரு வெறுப்பு இருந்து வந்தது. ஆனால் அப்போதும் ஈழப்பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வாக இருக்க முடியுமென்று நினைத்து வந்தேன். தமிழ் நெட்டில் ஒரு குடும்பம் படுகொலை செய்யப்பட்ட செய்தியை புகைப்படத்துடன் பார்த்ததன் பின் நான் அறியும் செய்திகளெல்லாம் ஒரு தலைப்பட்சமானவையோ என்று தோன்ற ஆரம்பித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக விடுதலைப்புலிகளின் மீது எனக்கு கரிசனத்தைத் தோற்றுவித்தது. பிறகு நான் சந்தித்த இலங்கைத்தமிழர்கள் கூறியவைகளை வைத்து எனக்கு இந்தியாவில் அறியத்தந்த செய்திகளெல்லாம் எவ்வளவு பாரபட்சமானவை என்று தெரியவந்தது. இப்போது எனது ஈழநிலைப்பாடானது ஒரு சராசரி ஈழத்தமிழரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. இதைப்பற்றியும் எழுத இருக்கிறேன்.

6. சில சாமியாடிகளும் நாங்களும்: எனது நெருங்கிய நண்பர்கள் சிலரும், எனது கல்லூரித்தோழர்கள் சிலரும் உத்தரகோசமங்கைக்கு சென்ற ஓர் அனுபவ நிகழ்வை எழுதலாமென்றிருக்கிறேன்.

7. வட இந்தியரின் தமிழ்: வட இந்தியர்கள் எப்படி தமிழ், தமிழர்வரலாறு மற்றும் தமிழைப்பற்றி தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி எனது அனுபவத்திலிருந்து எழுதலாமென்றிருக்கிறேன்.

8. முகமூடி மற்றும் பெயரிலி: இவர்கள் இரண்டுபேருடைய கருத்துக்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இருந்தபோதிலும் இருவருடைய எழுத்துக்களிலும் உள்ள நையாண்டி எனக்கு ஒன்று போலவே தோன்றுகிறது. மூகமூடியின் எழுத்துக்கள் பெரும்பாலும் எனக்கு எரிச்சலூட்டக்கூடிய கருத்துக்களையே தாங்கி வருகின்றன. எனினும் அவருடைய எழுத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கிறது. பெயரிலின் எழுத்திலும் அதிகளவில் ஈர்க்கக்க்கூடிய அம்சங்கள் இருக்கின்றன. இருவரின் பதிவுகளும் நான் விரும்பி படிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. இதைப்பற்றி எழுத நினத்துவைத்திருக்கிறேன். இது அளவில் அவ்வளவு பெரியதாக இருக்க வாய்ப்பில்லை.

9. எனது பதின்மூன்றாவது காதலியும் சில கடலைகளும்: முதலும் இதுவரை கடைசியுமாக என்னிடம் ஒரு தோழியாக பழகிய ஒரு பெண்ணின் மீது எனக்கு ஏற்பட்ட காதலையும் இருவரும் தொலைபேசியில் போட்ட கடலைகளையும் அவள் தன் கல்யாணத்துக்கு முதல்நாள் நான் உன்னை காதலித்தேன் எதிர்ப்புகளுக்கு பயந்து வெளிப்படுத்தவில்லை என்று சொன்னதையும் ஓர் இடுகையாக எழுத நினைத்திருந்தேன். இதில் அந்த பெண்ணின் அந்தரங்கமும் இருப்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

இவை நான் கண்டிப்பாக எழுத வேண்டுமென்று நினத்த கட்டுரைகள். இவை போக நான் எழுத நினத்தவை பலவற்றை நிச்சயம் எழுதுவேனென்று சொல்வதற்கில்லை. பதங்கமான அவை பதங்கமானவைகளாகவே போகக்கூடும்.