Friday 14 November 2008

தூயாவின் அழைப்பை ஏற்று

தமிழ்மணத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன் இணைக்கப்பட்ட பதிவில் ஒருசில இட்டிலிகள் சுட்டிருக்கிறேன் என்றாலும் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. அதனால் நானும் ஒரு பதிவன் என்று யாருக்கும் தெரியப்போவதுமில்லை. என்னை யாரும் அழைக்கப் போவதுமில்லை. ஆர்வமிகுதியால் நானாகவே வருகிறேன். தூயாவின் இடுகையைப் பார்த்தவுடனேயே எழுதத்தான் நினைத்தேன். என்ன கொஞ்சம் சுணங்கிவிட்டது.
 
 
 
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
 
மூன்று வருடங்களுக்கு முன் இணையத்தில் அந்த செய்தியையும் மூன்று புகைப்படங்களையும் பார்க்கும் வரை எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருந்ததில்லை. தேயிலைத்தோட்ட வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ற அளவில்தான் தெரியும். இத்தனைக்கும் எஸ்டீடியில் கிங்கு என்று நண்பர்களிடம் பெயர் வேறு. கவனிக்கவும் எனது ஊர் இராமநாதபுரம். தலைமன்னாரிலிருந்து 80கிமீ தொலைவில்தான் என் வீடு இருக்கிறது.
 

அனுபங்கள்? பெரிதாக எதுவுமில்லை. கதிர்காமன், ரீட் குலாஸ் என்ற இரண்டு இலங்கைத்தமிழர்கள் என்னுடன் பள்ளியில் படித்தார்கள். அதில் கதிர்காமன் சிறுவயதிலேயே இங்கு வந்து விட்டானாம். இன்னும் இராமநாதபுரத்தில்தான் இருக்கிறான். கொத்தனார் வேலை செய்கிறான். அநேகமாக மலையகத்தமிழனாக இருக்கலாம். ரீட் மன்னாரை சேர்ந்தவன். தந்தை ஒரு வணிகராம். இராஜீவ் கொலை நடந்ததற்கு முந்தைய ஒரு வருடம்தான் என்னுடன் படித்தான். இவர்களிடமிருந்து ஒரு அனுபவமும் இல்லை.
இங்கே இலண்டன் வந்த பிறகு சில இலங்கைத் தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். மேலும் திருமணம் ஆகும் வரை அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நான் தங்கியிருந்தது இலங்கைத்தமிழ்க் குடும்பங்களுடன் தான். உள்வாடகைக்கு அதாவது பேயிங் கெஸ்ட். அவர்கள் மூலமாக கொஞ்சம் இலங்கையைப் பற்றித் தெரியும்.
 

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
 
முன்பு ஈழப்பிரச்சினையின் ஆழம் தெரியாத போதுகூட தனி ஈழம்தான் ஒரேதீர்வாக இருக்க முடியும் என்று என் மனதில் பதிந்திருந்தது. அதுவே பெரும்பாலான தமிழகத்தமிழர்களின் கருத்தாகவும் இருக்கும். இப்போதும் என் நிலை அதுவே. ஆனால் முன்னைவிட இப்போது கொஞ்சம் விவரம் தெரிந்திருக்கிறது. என் தாய்மொழியே தேசிய மொழியாக இருக்கும் ஒரு நாடு என்ற சுயநல பெருமித உணர்வும் ஒரு காரணம் என்பதை சொல்ல தயக்க்மிருந்தாலும் மறைக்க விரும்பவில்லை.
 
3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
 
அவற்றைவிட நான் ஆர்வமாக படிக்க விரும்பும் எதுவும் இப்போதில்லை. வலைப்பதிவுகளிலும், mykathiravan.com போன்ற இணைய தளங்களிலும் படிப்பேன். நான் முன்னர் தங்கியிருந்த வீட்டில் இருந்த அண்ணன் கொண்டு வரும் ஈழமுரசு, புதினம் போன்ற அச்சிதழ்களை வாசிப்பேன். இப்போது தனிவீட்டில் மனைவியுடன் இருப்பதால் அவை கிடைப்பதில்லை.
 
4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
 
இப்போது தமிழ்நாட்டில் நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் ஓரளவு எழுச்சி இருக்கிறது என்றுதான் தெரிகிறது.  தமிழ்நாட்டு மக்களின் ஈழப்பிரச்சினை பற்றிய அறிவு மிகவும் மேம்போக்கானது. அதற்கே இப்படியென்றால் முழுவிவரமும் தெரிய வந்தால் இதைவிட அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
 
அவர்கள் மனவுறுதியும் பேரன்பும் கொண்டவர்கள். அவர்களுக்கு நான் என்ன சொல்ல?
 
பி.கு.
தலைப்பை தூயாவின் இட்டிலியைப் பார்த்தவுடனே எழுதிவிட்டேன். ஆனால் இந்த இட்டிலியை இப்போதுதான் சுட்டேன்