Friday 19 December 2008

என் மதர்டங் தமிழ்-1

நான் சென்னைக்கு புதிதாக அப்போதுதான் வந்து புதிய வேலை ஒன்றை தேடி கண்டடைந்திருந்தேன். எனது நிறுவனத்தில் தயாரிக்கும் கருவி ஒன்றிற்கான சில பொருட்களை ஒரு கடைசல் பட்டறையில் கொடுத்திருந்தார்கள். நான் அதனை மேற்பார்வை செய்து முடிந்தபின் வாங்கி வரவேண்டும்.

ஆல் சைக்கிள் ரிப்பேர்ஸ் டன் ஹியர் என்று ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட கடைக்கு அருகில் அந்த பட்டறை இருந்தது. அங்கு போனதில் இருந்தே எனக்கும் அந்த பட்டறைக்காரருக்கும் பேச்சு வார்த்தையில் சில சலசலப்புகள் இருந்தன. கடைந்து முடிந்தபின் அவர் ராவிக்கொண்டிருந்தார். நான் வெகுநேரமாக பேசாமலேயே இருந்தேன். அது என் இயல்பு. பின் நான் பட்டறை வாசல் வழியாக தெருவைப் பார்த்தேன். தெருவெங்கும் நிறைய பூசணிகள் உடைக்கப்பட்டிருந்தன. ஏதாவது பேசலாமென அவரிடம் கேட்டேன்.
 
"இன்னைக்கு என்ன விசேசம்? தெருவெல்லாம் பூசணிக்கா ஒடச்சிருக்காங்க."
 
அவர் நிமிர்ந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பின் கேட்டார்.
 
"ஒங்க மதர் லாங்வேஜ் என்ன?"
 
"தமில்தான் ஏன் கேட்குறீங்க?" என்றேன் நான்.
 
"இன்னிக்கு அமாவாசை. பின்ன ஒடைக்க மாட்டாங்களா? இதுகூட தெரியாதக்குறீங்க."

 "இல்ல. எங்க ஊர்ல அமாவாசைக்கு தெருவுல பூசணிக்காயெல்லாம் ஒடைக்க மாட்டோம்."