Monday 10 September 2007

சில சாமியாடிகளும் நாங்களும்

நான் அன்று காலை வழக்கமாக நண்பர்களுடன் டாப்படிக்கும்(டாப்படிப்பதின் அருஞ்சொற்பொருள்: இளைஞர்கள் ஏதாவது டீக்கடையின் முன் இரண்டு மூன்று பைக்குகளை குறுக்குமறுக்காக நிறுத்தி இரண்டு சிகரெட்டுகளை வாங்கி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ரவுண்டில் விடும் இடம்) இடத்துக்கு வந்தேன். நண்பர்கள் எல்லோரும் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
"கைல எவ்வளவு வச்சிருக்க"
" இருவது ரூபா இருக்கும் "
" சரி கிளம்பு போகலாம்."
" எங்கடா?"
" அதெல்லாம் அப்புறம் சொல்றோம் கிளம்பு மொதல்ல"
"இரு அவய்ங்கல்லாம் வந்துரட்டும்" என்றான் இன்னொருவன்
யாரு அவய்ங்க என்று முழித்தபடி நின்றிருந்தேன்.
கல்லூரியில்(சரி பாலிடெக்னிக்) என் வகுப்புத்தோழர்கள் இருவர் வந்தனர். அவர்களுடன் எங்களைவிட வயதில் மூத்த இன்னொரு நண்பரும் வந்திருந்தார். அவர்கள் வந்தவுடன் கிளம்பினோம். பஸ்ஸ்டாப் வந்தபிறகு திரும்பவும் கேட்டேன்.
"எங்கடா போறோம்? "
"உத்தரகோசமங்கைக்கு "
"எதுக்கு? "
"சாமி கும்பிட. "
என்னங்கடா இப்பிடி ஆரம்பிச்சுட்டிங்க என்று நினைத்தபடி நின்றிருந்தேன்.

பஸ் உத்தரகோசமங்கையை நெருங்கும்போது ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்க சொன்னார்கள். "என்னடா கோயிலுக்குப்போறேன்னு சொன்னீங்க?" என்று கேட்டேன். "இது வேற கோயிலு. வந்து பாரு தெரியும்" என்றார்கள். வயக்காடுகளின் வழியாக மொட்டை வெயிலில் நடந்து சென்றோம். வயல்கள் சூழ்ந்த இடத்தில் இரண்டு மூன்று மரங்கள் சுற்றிலும் நின்று நிழல் தந்து கொண்டிருந்த இடத்துக்கு கூட்டிச்சென்றார்கள். அங்கே ஒரு கண்ணங்கரேலென்று ஒரு கல் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எண்ணையெல்லாம் ஊற்றி பூ பொட்டெல்லாம் வைத்து பூசை நடந்திருந்ததற்கான அறிகுறி தெரிந்தது. அங்கு போனவுடன் என் கல்லூரி நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து "அன்னைக்கு வச்ச பூ இன்னும் வாடாம இருக்கு பாரு" என்றார்கள். எனக்கு வாடியமாதிரிதான் தெரிந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. போனவுடன் சட்டையெல்லாம் கழட்டச்சொன்னார்கள். நான் பெரும்பாலும் பொது இடங்களில் சட்டையை கழற்றுவதில்லை. என் உடம்புவாகு அப்படி. கொஞ்சம் ஹார்மோன் கோளாறு. சரி எல்லாப்பேரும் கழட்றாய்ங்களேனு கழற்றினேன். அந்த கல்லு கருப்பணசாமியாம். அதன் இரண்டு புறமும் வரிசையாக உட்கார்ந்துகொண்டு பஜனை பாட ஆரம்பித்தார்கள்.

என் நண்பன் ஒருவன் வருடம் தவறாமல் விரதம் இருந்து ஐயப்ப மலைக்கும் பழனிமலைக்கும் மாலை போடுபவன். அவனும் பஜனையில் பாடினான். ஒரு அருமையான பாட்டு. இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது.
எனத்தொடங்கும் பாடல். சரியான அடிப்பாட்டு(ரிதமிக்). ரொம்ப அருமையாக இருந்தது. கைதட்டிக்கொண்டே பாடினார்கள். எனக்கு பாடத்தெரியாததால் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். கைய மட்டுமாவது தட்டுடா என்றபிறகு கைகளை மெதுவாகத்தட்டிகொண்டிருந்தேன். திடீரென்று என் கல்லூரித்தோழன் ஒருவன் சாமிவந்ததுபோல ஆடத்தொடங்கினான். (பாவம் இப்போது அவன் உயிருடன் இல்லை. கொடைக்கானல் போகும்போது விபத்தில் சிக்கி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முப்பது நாட்கள் கோமாவில் இருந்து பின் உயிரைவிட்டான். இவன் தான்
போன இடுகையில் நான் குறிப்பிட்ட தியானம் பற்றி சொன்னவன்). பின் அந்த மூத்த நண்பர் அவனைப் பார்த்து யார் வந்திருக்கறது என்று கேட்டார். ஒன்றும் பேசவில்லை. மூர்க்கமாக ஆடிக்கொண்டிருந்தான். அவர் இரண்டு மூன்று முறை அதட்டிக்கேட்டுவிட்டு வந்திருக்கிறது கருப்பசாமி என்றார். பின்னர் இன்னொரு வகுப்புத்தோழனும் ஆடத்தொடங்கினான். அவனுக்கு வந்திருக்கிறது ஆஞ்சநேயராம். இரண்டு பேரும் ஆடிக்கொண்டிருந்தாலும் பஜனையைத்தொடருமாறு சைகை செய்தார்கள். நானும் என் நண்பர்களும் பயந்தபடி பஜனையைத் தொடர்ந்தோம். என் கடவுள் நம்பிக்கையே வேறு. கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. சாமியாடியவர்கள் மேல் நடிக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இல்லை. பின் என்னதான் அது. அது பற்றிய என் அனுமானத்தை கடைசியில் சொல்கிறேன். இப்போதைக்கு சம்பவத்துக்கு செல்வோம்.

பின் அந்த மூத்த நண்பருக்கும் சாமி வந்தது. அவருக்கு வந்திருப்பதும் ஆஞ்சநேயராம். என்னங்கடா இது டபுள் ஆக்டா என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் அவர்களே சொன்னார்கள். முன்னால் வந்தது பால ஆஞ்சநேயராம் இப்போது வந்திருப்பது வீர ஆஞ்சநேயராம். ஏதோ சொல்லுங்கடா என்றபடி உட்கார்ந்திருந்தேன். மூன்று பேரும் ஆக்ரோசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வசமாக நடுக்காட்டில் மாட்டிக்கொண்டோம். எனக்கெல்லாம் பயம். இவிய்ங்க பாட்டுக்கு எதாவது கல்ல கில்லத் தூக்கி தலையில போட்டுட்டு சாமி கொன்னுருச்சிட்டாய்ங்கன்னா. சரி ஆனது ஆகட்டும் பார்ப்போம் என்று அமைதி காத்தோம். அதுலயும் அந்த பாலஆஞ்சநேயர் அநியாயத்துக்கு முகத்தை குரங்கு மாதிரிக் காட்டிக்கொண்டு ரொம்ப சேட்டை பண்ணிக்கொண்டிருந்தான். பாலாஆஞ்சநேயர் ரொம்ப சேட்டைக்காரராமே. எனக்கு சிரிப்பு வந்தது. சிரிக்கவில்லை. பின்ன உயிர்பிரச்சினை இல்லையா?

பிறகு குறி சொல்ல ஆரம்பிச்சாய்ங்க. ஒவ்வொருத்தனயா கூப்பிட்டு கடந்த காலமெல்லாம் சொல்லி இனிமேல் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கக்கூறுகளையெல்லாம் சொன்னாய்ங்க. சைட் அடிக்கக்கூடாதாம். கறி மீன் சாப்பிடக்கூடாதாம். சரி ஓக்கே. எல்லாரையும் கூப்பிட்டு அவரவர் காதல் சங்கதிகளையே பேசினார்கள். என் முறைவந்தபோது என்னைப் பார்த்து ஹே இவனெல்லாம் லவ் பண்றான்டா என்றது கருப்பசாமி. அதென்ன இவனுக்கெல்லாம். நான் கொஞ்சம் அமைதியான நல்ல பையன் என்று பெயர் எடுத்தவன். ஆனாலும் சமீபகாலமாக மரபணு அதாங்க ஜீன்ஸ் பேண்ட் காட்டன் சட்டையெல்லாம் போட ஆரம்பித்து கொஞ்சம் ஸ்டைலெல்லாம் பண்ண ஆரம்பித்திருந்தேன். அதிலும் அந்த குணால் கட்டிங், மஸ்ரூம் கட்டிங், குவாலியர் கட்டிங் என்று பலவாறாக அழைக்கப்பட்ட சிகையலங்காரம் வைத்திருந்தேன். அதனால் நானும் காதல் வலையில் விழுந்திருப்பேன் என்று சாமி நினத்துவிட்டது. சாமிக்குத் தெரியாது இதுவரை பதினோரு பெண்களை ஒருதலையாக காதலித்து இப்போது பன்னிரண்டாவது பெண்ணையும் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்திருக்கிறேன் என்று. எல்லோருடைய காதலி பேரையெல்லாம் சரியாக சொன்ன சாமி என்முறை வந்தபோது பெயரை என்னிடம் கேட்டது. பாவம் அந்த நண்பனுக்கு அந்த பெண்ணின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா? என் நெருங்கிய நண்பர்களுக்கே தெரியாது. நான் சொன்னேன் பின் சாமி என்னை ஒன்றும் சொல்லவில்லை.

மூன்று சாமிகளும் இரண்டு மணிநேரம் தொடர்ச்சியாக மலையேறாமல் வளைச்சு வளைச்சு ஆடிக்கொண்டிருந்தன. எல்லாம் ஓய்ந்தபிறகு வீட்டுக்கு கிளம்பினோம். ஊர்வந்து இறங்கியபிறகு எல்லாவன்களும் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்னுட்டு போய்ட்டாய்ங்க. நானும் மலை ஏறிய சாமிகளும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். அதில் ஒருவன் மூக்கை இழுத்தபடி வாசனை வருதானு கேட்டான். நானும் அப்பாவியாக ஆமா எதோ வீட்டுல தோசை சுடுறாய்ங்க என்றேன். அட அதில்லைப்பா நாம் ஏத்தி வச்ச ஊதுபத்தி வாசனை வருதுல்ல என்றான். அந்த இடம் இருக்கும் இருபது கிலோமீட்டருக்கு அந்த பக்கம். இன்னொருவன் ஆமா வருது என்றான். எனக்கு ஒண்ணுக்குதான் வந்தது. சத்தம் போடாமல் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன். அதன்பிறகு எல்லோரும் வந்தார்கள். பிறகு கூடிபேசி சில முக்கிய முடிவுகளை எடுத்தார்கள். இனிமே எல்லோரும் முகூரணி பக்கத்திலிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் பஜனைக்கு வந்துடனும். இனிமே இளம்பெண்களை சைட் அடிக்கக்கூடாது. கறி, மீன் சாப்பிடக்கூடாது. இதென்னடா வம்பாருக்கு. வசமா மாட்டிக்கிட்டோம் போலருக்கே. பேசாம காலையில இன்னும் கொஞ்சநேரம் தூங்கியிருக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். என்னளவில் ஆஞ்சநேயர் முதற்கொண்டு இன்னபிற தெய்வங்கள் எதுவுமில்லை. ஆனா எதோ ஒண்ணு இருக்கு. அவ்வளவுதான். இவிய்ங்களுக்கு வந்தது சாமியில்லை. ஆனால் பயம் காரணமாக அவிய்ங்க சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு சரி என்று சொல்ல வேண்டியதாயிற்று.

அடுத்த நாள் வழக்கம் போல டாப்புக்கு வந்தேன். எல்லாம் சுரத்தே இல்லாம இருந்தார்கள். நான் தான் ஆரம்பித்தேன்.
"என்னடா இப்பிடி சொல்றாய்ங்க."
"எவ்வளவு நாளைக்குடா இப்பிடி? "
"இனிமே வாழ்க்கைபூரா இப்படித்தான்"
"நம்ம லவ் பண்றதெல்லாம்? "
"மறந்துற வேண்டியதுதான். "
"சைட் அடிக்கக்கூடாதாம்ல. "
"அதான் சொன்னாய்ங்கல்ல. "
தயங்கி தயங்கி கேட்டேன். "அப்ப கை? "
"இவன் யார்றா இவன். சைட்டே அடிக்கக்கூடாதுன்றாய்ங்க. நீ கையின்ற. "
"என்னங்கடா நீங்கல்லாம் ரேகை அழிஞ்சு போய் நிக்கிறீங்க. நானல்லாம் இப்பத்தான்டா ஆரம்பிச்சுருக்கேன்." (அப்போது எதோ ஐம்பது சொச்சத்தில் இருந்தது. இருநூற்று சொச்சம் வரை கணக்கு வைத்திருந்தேன். பிறகு விட்டுவிட்டேன்(எண்ணுவதை)).
"அதுக்கென்ன பண்றது. விடுறதுன்னா எல்லாத்தையும்தான் விடனும்".

பிறகு இன்னும் இரண்டு நாட்கள் ஒழுங்காக பஜனைக்குப் போனோம். அப்போதுதான் அந்த மக்கள் பங்குபெற்ற புரட்சி நடந்தது. நண்பர்களில் ஒருவன் மெதுவாக ஆரம்பித்தான். எனக்கென்னவோ இவிய்ங்க நடிக்கிறாய்ங்கன்னு தோணுது என்றான். நான் தொடர்ந்தேன். எனக்கு அப்பவே தோணுச்சு. ஆனா இவிய்ங்க நடிக்கிறாய்ங்கன்னெல்லாம் நான் நினைக்கல. இவிய்ங்களுக்கு வந்திருக்கிறது செல்ஃப் ஹிப்னாடிசமா இருக்குமோன்னு நினைக்கிறேன். நண்பர்கள் யாரும் இதை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் ஒரே முடிவாக இது நடிப்பு என்ற நினைப்புக்கு வந்து விட்டார்கள். பிறகு யாரும் பஜனைக்கு போகவில்லை.

பின்னர் மார்கழி மாதம் வந்தது. அந்த மாலை நண்பன் போடுகிற வழக்கம்போல மாலை போட்டான். இன்னும் சில நண்பர்களும் கன்னிச்சாமியாக மாலை போட்டார்கள். நான் வழக்கம் போல போடவில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை. மேலும் என் அப்பாவுக்கும் தெய்வ நம்பிக்கை இருந்தாலும் இதெல்லாம் விரும்ப மாட்டார். மாலை போடாமல் விரதம் இருந்து அவர் அலுவலக நண்பர்களுடன் ஒருமுறை காரில் ஐயப்ப மலைக்கு போய்வந்தார். நண்பர்களுடன் இன்னும் சில இளம் சாமிகளும் (எல்லாம் எங்கள் கிரிக்கெட் டீமில் விளையாடுபவர்கள்தான்) சேர்ந்து கொண்டார்கள். சரி பஜனை பாடுவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். இதனால் டாப் இடம் மாறியது. ஆனால் இந்த டாப்பில் சாமிகளெல்லாம் ரொம்ப ஒழுக்கம். அந்த வீட்டிற்குள் யாரும் தம்மடிக்கக்கூடாது. நானும் இன்னும் இரண்டு நண்பர்கள் மட்டுமே மாலை போடாதவர்கள். அவர்கள் இரண்டு பேரும் தம் அடிக்காதவர்கள்(அப்போது). எனவே நான் கீழிறங்கிப்போய் துணையில்லாமல் தம்மடிக்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் காதலுக்கு மரியாதை படம் வெளியானது. படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது. சாமிகளால் பார்க்க நினைத்தாலும் பார்க்க முடியவில்லை. சாமிகள் போகாததால் நானும் பார்க்கவில்லை. என்னை விட மாலை போட்ட அனைவரும் சினிமா பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். அவர்களால் தாங்க முடியவில்லை போலும் நான் இல்லாதபோது போய்விட்டு வந்துவிட்டார்கள். அதன்பிறகு சாமிகளின் ஒழுக்கம் ஆட்டம் கண்டது. ஒவ்வொருவராய் யாருக்கும் தெரியாமல் போய் தம்மடித்துவிட்டு வந்தார்கள். பின்னர் அதுவும் நிலைக்கவில்லை. வீட்டுக்கு வெளியில் பால்கனியில் அடிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் வீட்டுக்குள் அடிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் காவி வேட்டியைத்தவிர வேறு வேறுபாடு எதுவும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் பஜனை மட்டும் நிற்கவில்லை.

ஒருநாள் மாலையில் நான் அந்த புதிய டாப்புக்கு வந்து பார்த்தால் அந்த பழைய சாமியாடிகள் வந்து உட்கார்ந்திருந்தார்கள். இதென்னடா புதுசிக்கல் என்று நினைத்துக்கொண்டே நழுவப்பார்த்தேன். முடியவில்லை. அந்த சாமியாடிகள் மூன்று பேரும் தங்கள் பஜனைக்கு வராததைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் வழக்கம் போல எல்லா பஜனையிலும் ஒருவர் மாற்றி ஒருவர் சாமியாட ஆரம்பித்தார்கள். அதிலும் அந்த அங்கே இடிமுழங்குது பாட்டை பாடினால் எதாவது ஒரு சாமி வந்துவிடும். ஆனால் எப்போதும் அந்த ஆஞ்சநேயரும் கருப்பசாமியுமே வந்தார்கள். இந்தமுறை டபுள் ஆக்டெல்லாம் போடவில்லை. ஒரே ஆக்ட்தான். நண்பர்கள் அனைவரும் அவர்கள் போனபின்னர் சொல்லிச்சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் வழக்கம் போல தன்னிச்சையாக இது நடிப்பில்லை. செல்ஃப் ஹிப்னாடிசம் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன்.

பின் நண்பனின் வீட்டில் எதோ பூஜை பண்ணுவாய்ங்கல்ல அது பண்ணாய்ங்க. அந்த பூஜைக்கு குருசாமி வந்திருந்தார். அவருக்கும் அடிக்கடி சாமி வருமாம். ஆனால் அது ஒரிஜினல் சாமியாம். அவருக்கு சாமிவந்தால் நடந்தது நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லுவாராம். நான் வழக்கம் போல இதுவும் செல்ஃப் ஹிப்னாடிசம் என்று நினைத்துக்கொண்டேன். வெளியில் சொல்லவில்லை. பின்ன எல்லோரும் ஒன்று சொல்லும்போது நான் மனதிற்குள்தான் நினைத்துக்கொள்ள முடியும். வெளியில் சொல்லமுடியுமா என்ன? அந்த பூஜைக்கு மூன்று சாமியாடிகளில் ஒருவன் வந்திருந்தான். அதுதான் அந்த பால ஆஞ்சநேயர். இங்கேயும் வந்து இரண்டுமணிநேரம் சாமியாடினானாம். நான் அந்த பூஜைக்குப் போகவில்லை. நண்பர்கள் சொன்னார்கள். பிறகு அந்த குருசாமி ஓங்கி அறைந்து சீ போ! என்றாராம். பின்னர் நாடி நரம்பெல்லாம் அடங்கி பேயறைந்ததுபோல நின்றானாம். நண்பர்கள் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற ரீதியில் பேசிக்கொண்டார்கள். நான் இப்போதும் அவன் நடிக்கவில்லை என்று மனதிற்குள் நினத்துக்கொண்டேன். சரி அந்த கதை அத்தோடு முடிந்தது. அதன்பிறகு இப்போதும் நண்பர்கள் நாங்கள் இதைப்பற்றி பேசஆரம்பித்தால் வேடிக்கை நிகழ்ச்சியாகத்தான் பேசிக்கொள்வோம்.

என்னைப்பொறுத்தவரை அந்த மூன்று பேருக்கும் வந்தது செல்ஃப்ஹிப்னாடிசமோ என்னவோ. உளவியல் வல்லுநர்கள்தான் சரியான பதிலை சொல்ல முடியும். ஆரவாரமாக பஜனை செய்வதால் ஏற்படும் சத்தத்தால் கிளர்ந்தெழும் ஆழ்மனது அவர்களை ஒருவித மயக்கத்துக்கு கொண்டு செல்கிறது. அப்போது அவர்கள் அந்த நிலையில் தங்களுக்கு இன்ன சாமிவந்திருக்கிறது என்று நினத்துக்கொள்கிறார்கள். அதனால் அந்த சாமியைப் போலவே அதாவது அந்த தெய்வங்களைப்பற்றி நமக்கு சொல்லப்பட்ட கதைகளில் வருவதுபோல நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மயக்கநிலையில் அவர்களுக்கு ஓர் அதீத பலம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் அவர்கள் சராசரி மனிதர்கள் செய்ய இயலாத காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். அம்மயக்கநிலையில் தங்கள் ஆழ்மனதில் சரியானது என்று பதிந்துவிட்ட விசயங்களை வெளியில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இங்கே ஒன்றைக் கவனிக்கவும். நம் ஆழ்மனது எப்போதும் சரியான விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வெளிமனது அதை ஏற்றுக்கொள்வதில்லை. வெளிமனது வெற்றியின் பெருமிதத்தையே விரும்புகிறது. அது விவாதங்களில் தோற்பதை விரும்புவதில்லை. எனவே புதுப்புது சமாதானங்களை சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப்படுத்திக்கொள்கிறது. இப்போது வலைப்பதிவுலகில் நடக்கும் விவாதங்களையெல்லாம் சேர்த்து நடக்கும் விவாதங்களில்லாம் சரியான வாதங்கள் வைக்கப்படும்போது ஆழ்மனது அதை ஏற்றுக்கொள்கிறது. வெளிமனது தோல்வியை விரும்பாமல் தொடர்ந்து வாதம் செய்துகொண்டேயிருக்கிறது. எதோ ஒரு பதிவில் படித்தேன். விவாதங்கள் நடக்கும்போதெல்லாம் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்கிறார்களே தவிர முடிவொன்றும் ஏற்படுவதில்லையென்று. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வெளிமனதை பொறுத்த விசயம். ஆழ்மனது சரியானதை ஏற்றுக்கொள்கிறது. சரி மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். இந்த மாதிரி சாமி வரும் சமயங்களில் சில சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் நடக்கிறது. இது எப்படி என்றுதான் தெரியவில்லை. அவர்கள் சொல்வது குத்துமதிப்பாக நடக்கிறது என்றெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உளவியலின் ஓர் அதிசயம். இப்போது நாம் கொண்டிருக்கும் அறிவின் மூலம் சிந்தித்துப் பார்த்தால் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் என்னுடைய ஐயம் என்னவென்றால் அப்படி ஏன் எதிர்காலத்தை கணிக்க முடியாமல் இருக்கவேண்டும். முடியாதவை பலவற்றை இன்றைய அறிவியல் முடித்துக்காட்டியிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் ஏன் எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஓர் ஆற்றல் மனிதன் பெற முடியாது? முடியக்கூடும் அல்லவா? தன் பரிணாம வளர்ச்சிக்கான செய்தியை ஓர் உயிரினம் தனது சந்ததிகளின் வழியாக கடத்திக்கொண்டே செல்கிறது. எனவே உயிர்கள் அழிந்தாலும் அவற்றுக்கான ஒரு தங்களால் உணரமுடியாத ஒரு செய்தி பரிமாற்றம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தை அறியக்கூடிய ஆற்றலைப் பெறமுடியும் என்று எனக்குத்தோன்றுகிறது. இது முற்றிலும் எனது அனுமானம் மட்டுமே. இதற்கு என்னால் எந்தவொரு தரவும் தரவியலாது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். எனவே அந்த ஆழ்மனதை நான் கடவுள் என்று சொல்கிறேன். வெறுமனமே சொல்லமட்டுமே செய்கிறேன். இது உண்மையில்லை. அல்லது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதையே இந்துமதமும் புத்தமதமும் ஆன்மா என்று சொல்கிறது என்று நான் நம்புகிறேன். ஏ உயிரே நீயே அது என்று இந்து மதம் சொல்வது இதைத்தான் என்று நான் நினைக்கிறேன். மதம் பற்றிய என் பார்வைகள் வேறுவிதமானவை. அதை இன்னொரு இடுகையில் எழுதுகிறேன். இப்போதைக்கு முடியவில்லை. தூங்கப்போகிறேன்.