Saturday 12 May 2007

தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சி





இந்த படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று எனக்கு நினைவில்லை. ரொம்ப காலமாக எனது கணினியின் மைபிக்சர்ஸில் இருந்தது.

உலக மொழிக்குழுக்கள்


இந்த படம் விக்கிபீடீயாவிலிருந்து எடுத்தது.

Friday 11 May 2007

அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன் மற்றும் ஆட்சிமொழி

அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை மறுத்து எழுதும் அளவுக்கு நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்றாலும், அவர்களின் வழக்கமான பரப்புரை உத்தி இதற்கு எதாவது பதில் எழுத வேண்டும் என்று என்னை உந்தி தள்ளியது. இது இப்போதைக்கு பொதுப்பார்வையில் வைக்கப்படாது. என்றாலும் ஒரு நாள் இது திரட்டிகளில் இடப்படும்.

// அது சர்வ தேச மக்கள் மொழியாகப் பல்வேறு ரூபங்களில் வழக்கத்தில் இருந்து வருவதை மொழியியலாளர் அறிவார்கள் //


சமஸ்கிருதம் சர்வதேச மொழி என்று எந்த மொழிவியலாளரும் சொல்வதாக நான் படித்ததில்லை. எனது வாசிப்பு அனுபவத்தில் (கொஞ்சம் குறைவானதுதான்) நான்கண்ட வரை சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றே சொல்லப்படுகிறது. ஒரு மூல ஐரோப்பிய மொழியிலிருந்தே பண்டைய ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் கிளைத்தன. அம்மொழிகளைப்போலவே சமஸ்கிருதமும் கிளைத்திருக்கலாம் என்றே ஒரு கருதுகோள் வைக்கப்படுகிறது. சமஸ்கிருதம் இந்தியாவில் தோன்றியதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை.
இந்துத்வவாதிகள் அடிக்கடி சொல்வது, சமஸ்கிருதத்திலிருந்தே அனைத்து ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் தோன்றின. அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் பண்டைய மற்றும் தற்போதைய ஐரோப்பிய மொழிகளில் காண்ப்படுகின்றன. நான் ஒரு கேள்விகேட்கிறேன். நிறைய ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் புழங்குகின்றனவா? அல்லது நிறைய ஐரோப்பிய மொழி வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் புழங்குகின்றனவா?
இந்தியாவிலிருந்து ஒரு மொழி உலகம் முழுவதும் பரவியதென்றால் ஒரு இந்தியனாக எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அதை நிறுவ முயலுபவர்கள் பொய்யான தரவுகளை வைக்கிறார்கள் அல்லது வேண்டுமென்றே ஒரு பரப்புரையை நிகழ்த்துகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்துத்வவாதிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் போன்ற தொன்மையும், பழமையும் இலக்கண, இலக்கியச் சிறப்புகளும் உடைய மொழிகளின் தனிச்சிறப்பை மறுக்கிறார்கள். தமிழும் சமஸ்கிருத்திலிருந்தே தோன்றியதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்க முயலுகிறார்கள். அது முடியாததால் மிகவும் தடுமாறுகிறார்கள். திராவிட மொழிகளின் தனிச்சிறப்பை வெளியில் கொண்டுவந்த கால்டுவெல் போன்றோரை காழ்ப்புனர்ச்சியோடு இகழ்கிறார்கள். சமஸ்கிருதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து மற்ற மொழிகளை அல்லது மற்ற மொழிகளை பேசுபவர்களை சமஸ்கிருத்ததை நோக்கி தொழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சங்கங்கள் வைத்து வளர்த்த தமிழை அவ்வாறு செய்துவிட முடியாது எனபதை அவர்கள் உணர்வதில்லை.
தமிழும் இந்தியாவின் மொழிதான். சமஸ்கிருதத்தைப் போன்று இலக்கண இலக்கிய வளங்கள் உடைய மொழி. சமஸ்கிருதத்தைவிட ஒரு படி மேலாக இந்தியாவில் தோன்றியதாக அனைவராலும் நம்பப்படும் ஒரே மொழி. தொன்மையாலும், இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும், வேறு எந்த பிறநாட்டு மொழிகளின் தாக்கம் இல்லாததுமான தமிழுக்கு இல்லாத சிறப்பு ஒன்றும் சமஸ்கிருதத்துக்கு இல்லை. இங்கே இந்திய தேசியம் பேசுபவர்கள் உண்மையில் நமது நாட்டின் சிறப்பான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால் தமிழுக்கு அதற்குரிய இடத்தை முதலில் பெற்றுத்தரட்டும். யாராலும் பேசப்படாத ஒரு மொழிக்கு ஆட்சிமொழியாகும் தகுதி இருக்கிறதென்றால் அதை விட அதிக தகுதி இந்தியாவில் தோன்றிய, இன்றைக்கும் பேசப்படும் உலகத்தின் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு நிரம்பவே இருக்கிறது.

// நம் நாட்டிலுங்கூடப் பல்வேறு மொழி பேசும் சாதாரண மக்களிடையே ஏராளமான சமஸ்க்ருதச் சொற்கள் வெகு இயல்பாக நடமாடி வருகின்றன //


சம்ஸ்கிருத சொற்கள் இயல்பாக எப்படி சாதாரண மக்களிடம் புழங்க முடியும். இயல்பாக நடமாடுகிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் இவைதான் இந்திய மொழிகளில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை உருவாக்கியது. ஆகவேதான் வட இந்தியரின் கைக்கு எட்டாத தமிழகத்தில் குறைவாக இருந்தது. வட இந்தியரின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றை தமிழகத்தில் தடுத்தது நிறுத்தியது மேற்குத் தொடர்ச்சி மலையே ஆகும். இப்படியெல்லாம் ஒரு மொழி பரவுவது இயல்பானதுதானென்றால் ஆங்கிலேயரின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றினால் உருவான ஆங்கில ஆதிக்கமும் ஆங்கில நாகரீகமும் கிருத்தவமும் இயல்பானதுதான். இதை ஒத்துக்கொள்கிறீர்களா?


// அவையில் சமஸ்க்ருதத்தின் அருமை அறியாதவர்கள் அதிகம் இருந்ததால்//


இதையே நான் உங்களுக்குத் திருப்பிச்சொல்லுகிறேன். தமிழர்களாக இருந்தும் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் தமிழின் அருமை அறியாமல்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் தமிழர்களின் மொழி மட்டுமல்ல. இந்தியாவின் பெருமை.