Tuesday 2 October 2007

தூண்டப்பட்ட திரிவிளக்கு

ஓசை செல்லாவும் சுப்பையா வாத்தியாரும் ஏதோ கடவுளைப்பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் இந்த இடுகையை படித்ததனால் எனக்கு அப்படித் தோன்றுகிறது. மிகவும் குறைவான வேகம் உள்ள இணைய இணைப்பு என்பதனால் இது சம்மந்தமான அனைத்து இடுகைகளையும் படித்துப் புரிந்து கொள்ள நேரமில்லை மன்னிக்கவும்.

நான் இணைய இணைப்பு இணைப்பு இல்லாத இந்நேரத்தில் கொஞ்சம் நேரமே கிடைத்திருப்பதாலும் கிடைத்த நேரத்தை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலினாலும் அவசர அவசரமாக எழுத ஆரம்பிக்கிறேன். எனவே என்னால் எந்த பதிவுகளிலிருந்தும் மேற்கோள் காட்ட முடியாது மேலும் இது அந்த ஓர் இடுகையைப் படித்ததனால் தூண்டிவிடப்பட்ட என் சிந்தனை அவ்வளவுதான்.
எனக்கு விடை தெரியாத சில கேள்விகள் ரொம்ப நாட்களாகவே உண்டு. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமென்றிருக்கிறேன்.

முதல் கேள்வி
எனக்கு என்ன நிறமெல்லாம் என்ன நிறமாக தெரிகிறதோ அது எல்லோருக்கும் அதே நிறமாகத்தான் தெரிகிறதா? புரியவில்லையா? இருங்கள் கொஞ்சம் தெளிவாகக் குழப்புகிறேன்.
இப்போதைக்கு இரண்டு நிறத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். நான் பிறந்ததிலிருந்து ஒரு நிறத்தை சிவப்பு என்றும் இன்னொரு நிறத்தை பச்சை என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
(கொஞ்சம் நிறுத்திப் படிக்கவும்) இன்னொருவருக்கு அவர் பிறந்ததிலிருந்து நான் சிவப்பு என்று நினைத்துக்கொண்டிருந்த பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம் பச்சை நிறமாகத் தெரிகிறது. ஆனால் அவருக்கு அது சிவப்பு நிறம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என்னுடைய பச்சை நிறமெல்லாம் அவர் கண்களுக்கு சிவப்பாகத் தோன்றுகிறது. அது அவருக்கு பச்சை நிறம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது எனக்கு சிவப்பு நிறமாகவும் அவருக்கு பச்சை நிறமாகவும் தோன்றுவதெல்லாம் இருவரின் வார்த்தைகளிலும் சிவப்புதான். ஆனால் இருவரின் பார்வைகளிலும் வேறு வேறு. இதையே எல்லா மனிதர்களுக்கும் யோசிப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் தெரிகிறது. ஆனால் பெயர்கள் மட்டும் ஒன்று. இப்படியிருந்தால் எப்படி இருக்கும்? இது என் கற்பனைதான்.இது பொய்யாகவும் இருக்கலாம் உண்மையாகவும் இருக்கலாம். இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது. இதை பொய்யென்று எப்படி நிரூபிப்பது?

சரி இருக்கட்டும் இப்போது இரண்டாவது கேள்வி
நேற்றைய ஒரு மில்லிமீட்டரும் இன்றைய ஒரு மில்லிமீட்டரும் உண்மையில் ஒரு மில்லிமீட்டர்தானா?
சரி சரி திரும்பவும் பழையபடி தெளிவாகக் குழப்புகிறேன்.
நேற்று ஒரு பொருள் அளக்கப்படுகிறது. அப்போது அது ஒரு மில்லி மீட்டர் இருக்கிறது. அதன்பின்பு எல்லாப்பொருட்களும்(உயிருள்ளவை உயிரற்றவை அனைத்தும்) மெதுவாகவும் சீராகவும் வளர்கின்றன. அடுத்த நாள் எல்லாப் பொருட்களும் கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்துவிட்டன என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த அளக்கப்பட்ட பொருள் நேற்றைவிட பெரியதாக இருக்கிறது.

எல்லாப்பொருட்களும் வளர்ந்திருப்பதால் நேற்று அளக்கப் பயன்படுத்திய அளவுகோலும் வளர்ந்திருக்கும். எல்லாமும் சீராக வளர்ந்திருப்பதால் அளவுகோல் இப்போதும் ஒரு மில்லிமீட்டர்தான் காட்டும். ஆனால் இன்றைய ஒரு மில்லிமீட்டர் நேற்றைய ஒரு மில்லிமீட்டரைவிடப் பெரியது. அப்படி தினமும் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒரு மில்லி மீட்டர் என்பது ஒரே நீளத்தில் எப்போதும் இருப்பதில்லை. ஆனால் நாம் அளந்தால் எப்போதும் நமது அளவுகோல் ஒரு மில்லிமீட்டர்தான் காட்டுகிறது.

இது உண்மையா? பொய்யா? இதை உண்மையென்றோ பொய்யென்றோ எப்படி நிரூப்பிப்பது? இதுவரை இது உண்மையென்று நிரூபிக்கப்படாததால் இது பொய்யென்று சொல்ல முடியுமா?

மூன்றாவது கேள்வி
இந்த கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். பலதடவை பலரால் கேட்கப்பட்டக் கேள்விதான்.

காலம் எப்போது ஆரம்பித்தது? ஆரம்பிக்கும் முன்னால் எதாவது காலம் இருந்திருக்குமே. அப்படியிருந்திருந்தால் காலம் என்பது தொடங்கியிருக்கவே வாய்ப்பில்லையல்லவா? அதேபடி காலம் முடியவும் வாய்ப்பில்லை. சரி ஏதொவொன்று இருக்கிறதென்றால் அது கண்டிப்பாகத் தொடங்கிதானே இருக்கவேண்டும்? தொடங்காமலே எப்படி ஒன்று இருக்கமுடியும்?


இது சம்மந்தமான ஒரு கிளைக்கேள்வி.
உலகில் அசைகின்ற அனைத்தும் அனைத்து அசைவுகளையும் நிறுத்திவிடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதாவது மூளையும் தனது செயல்பாட்டை நிறுத்திவைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட ஐந்துநாட்கள் இப்படி நிற்கின்றன. பிறகு மறுபடியும் இயங்க ஆரம்பிக்கின்றன.
இப்போது உலகில் எல்லாக்கடிகாரங்களும் நின்ற நொடியிலிருந்து இயங்க ஆரம்பிக்கின்றன. உலகின் எல்லா மூளைகளும் விட்ட இடத்திலிருந்து சிந்திக்க ஆரம்பிக்கின்றன.

அப்படியானால் கடிகாரங்களின்படியும் உயிரினங்களின் உணர்வுகளின்படியும் நின்றுபோன அந்த ஐந்து நாட்கள் கணக்கில் வரவே வராது.
இப்படி ஒன்று உண்மையில் நிகழ்ந்திருக்குமானால் அதை எப்படி நிரூபிப்பது?

இதுவரை எப்படி நிரூபிப்பது எப்படி நிரூபிப்பது என்று நிறைய முறைக் கேட்டுவிட்டேன். இப்போது நேரடியாக நான் சொல்ல வருவதை சொல்கிறேன்.

அதாவது
நாம் புரிந்துகொள்வது எதையும் எதாவது ஒன்றுடன் ஒப்பிட்டே புரிந்துகொள்கிறோம்.
நாம் அளக்கும் எதையும் எதாவது ஒன்றுடன் ஒப்பிட்டே அளக்கிறோம்.
தெளிவாக சொல்வதானால் பகுத்தறிவென்பது ஒப்பிட்டு அறிவது நாம் கண்டுபிடிக்கிறது எதையும் உண்மையில் கண்டுபிடிப்பதில்லை. வெறும் பெயர் மாத்திரமே வைக்கிறோம்.
நாம் ஒப்பிட்டு அறிந்துகொள்ளுவதற்கு பயன்படுத்தியவற்றையெல்லாம் வரிசைப்படுத்திக்கொண்டே போனால் ஒப்பிடாத முதற்பொருள் ஒன்று எல்லா அளவைக்கும் இருக்குமல்லவா? அதாவது நம்முடைய அறிந்துகொள்ளும் அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இயங்குகிறது. ஆனால் அதற்கும் மேலே அறிந்துகொள்ள முடியாத எதோ ஒன்று அல்லது பல இருக்கின்றன.
அதாவது ஏதோ ஒன்று அல்லது பல எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது அல்லது தானே இயங்க விடுகிறது. அதை கடவுள் என்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். ஏனென்றால் நாம் பெயர் மட்டுமே வைக்கிறோம்.
ஒருமுறை நண்பர்களுக்குள் பேய் பிசாசைப்பற்றி ஒரு விவாதம் நடந்தது. என்னிடம் ஒருவன் கேட்டான். "பேயை நம்புகிறாயா?". நான் சொன்னேன் "கடவுள் என்று இருப்பதாலேயே பேயென்று ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே பேயென்று ஒன்று இருந்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்."
எல்லோரும் என்னை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. மீதி ஒயினைக் குடிக்க ஆரம்பித்தேன்.
சரி என்ன சொல்லவருகிறாய் என்று கேட்கிறீர்களா? நான் எப்போதோ சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன் அல்லது சொல்லிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன். யாராவது பின்னூட்டத்தில் உதவுங்கள்.


14 பின்னூட்டங்கள்:

  1. Anonymous said...

    you never fail to surprise me /but i am not suprised to see this from you!!!how is that?well i mean it though.

    சரி, உங்கள் பதிவைப்படித்ததும் ஒரு னிமிடம் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.இதே விதமான பேச்சு நானும் இன்னொரு ந்ண்பனும் பேசியிருக்கோம்.

    உங்கள் கேள்விகள் சிலவற்றீர்க்கு அத்வைதம் பதில் தரும்.
    உதாரணமாக' 2' என்று எழுதினால் என்ன சொல்வீர்கள்?எண் என்பீர்களா/இரண்டு என்பீஇர்களா?/எழுத்து என்பீர்களா?/.அல்லது படிக்காதவராயின் இது என்ன என்று கேட்ப்பது கூட சாத்தியம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் உண்டு. ஒரு முறை ஒரு மனிதர் ,படிக்காதவர் போலும். என்னிடம் ஒரு ஆஸ்பத்திரியில் வழி கேட்டார். நான் பாட்டிர்க்கு அதோ அந்த ந்ம்பர் இருக்கே அங்க போங்க என்றேன். அவர் மிகவும் பாவமாக தன்க்கு எண் கள் தெரியாது என்றார்.
    i wonder whether you were talking of different realities for each person. if you are inclined read pathanjali yoga sutra from ramakrishna mutt shops./ costs about 25 rs or so. excellent.

    very interesting and good luck .

  2. said...

    அன்புள்ள சிஜிஎஸ்,
    நான் இன்னும் இந்த இடுகையை தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. அதற்கு முன்பாகவே எனது பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டதற்கு மிகவும் நன்றி.

    நீங்கள் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வருகிறீர்கள். உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும்போது நீங்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறீர்கள் போல் தெரிகிறது. அந்தளவு என்னிடம் சரக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

    தத்துவம் என்ற அளவில் நான் விவேகானந்தரின் நூல்களில்தான் அத்வைதம் பற்றிப் படித்திருக்கிறேன். அது என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஆனால் அத்வைதம் பற்றி நான் ரொம்பவெல்லாம் அறிவுடையவனில்லை. நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.

    உங்களின் தொடர்ந்த ஆதரவு வெறும் மொக்கைகளையே எழுதலாம் என்று நினைத்திருந்த என்னை இது போன்ற இடுகைகளை எழுதத் தூண்டுகிறது. நன்றி

  3. said...

    சுவாரசியமா இருக்கு. இப்படி ஒரு ஓரமா இடம்புடிச்சு உக்கார்ந்துருக்கேன்.
    தெரிஞ்சவங்க வந்து சொல்லட்டும்.

  4. said...

    //துளசி கோபால் said...
    சுவாரசியமா இருக்கு. இப்படி ஒரு ஓரமா இடம்புடிச்சு உக்கார்ந்துருக்கேன்.
    தெரிஞ்சவங்க வந்து சொல்லட்டும்.//

    உங்களுடைய அச்சச்சோவைத்தான் இப்போது படித்துக்கொண்டிருந்தேன். டேஷ் போர்டில் பார்த்தால் உங்கள் பின்னூட்டம். நன்றி

  5. Anonymous said...

    i was worried too umayanan that my replies may put pressure on you.

    please do what makes you comfortable.ரமணருடய வார்த்தையில் சொன்னால்'சும்மா இரு'.இது மிகவும் ஆழமான வாக்கியம் என்பார்கள்.எனக்கு அத்தனை விவரம் இல்லை.
    incase you are interested read this web page http://davidgodman.org/.

    also i thot of responding to your view about che and ramana.but something prevented me.however what i want to tell you is,when i was of your age che (even pirabakaran) was a hero.but life taught quite a few lessons, so from swinging between no god now i am towards yes god. i do realsie all the limitations of idol worship, caste etc.
    but for me personally ramana and j krishnamurthy made sense. so now i am in that path....

    you are young so enjoy life.

    i must say though, i would prefer a non mokkai post from you. there are n't many bloggers who write like you, without reading much.there is a certain level of originality in you. (as for the issue of your statement 'evil and god may be one' .most philosophers would say that!!!!!!!!!!!!!!)

    thats why i keep a tab of yours. i also think mayuran's' m'is a sensitive one too.

  6. said...

    இது, பதிவு! மிகச் சிறப்பாக(?) விளக்கி இருக்கின்றீர்கள்.

    ஏகப்பட்ட சங்கதிகளை எழுதி விட்டு அனைத்தையும் ஒரே கோட்டில், சார்பின் அடிப்படையில் விளக்க முயன்றுள்ளீர்கள். அந்த வகையில் கட்டுரை முடிவுற்றதாகவே கொள்ளலாம். அட, இங்க கூட சார்பு தான்.

    நீங்கள் சொல்லும் கூற்றை நிறுவ/மறுக்க மிகப்பெரிய சோதனை பரப்பு (large sample size) தேவைப்படும். அதுவும் பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டது. எடுத்துக் காட்டிற்கு, நிறக்குருடர்கள். அது நடக்காது. அதனால் தக்க ஒப்புமை சான்றுகளுடன் கூடிய ஒரு கூற்றை, தள்ள முடியாது.

    இரண்டாவது கேள்வி, நீங்கள் அளவிடும் பொருளின் நிலைத்தன்மை \ நம்பகத்தைப் பொருத்தது. இயற்பியல் தராசுக்கும், இயல்பான தராசுக்கும் வேறுபாடு அறிவீர்கள் என நம்புகிறேன். வளர்வது, வளராதது எல்லாம் இங்கே கிடையாது. அப்படி வேறுபட்டால் அந்த அளவு முறை காலப்போக்கில் மறைந்து விடும். முழம் பூ அளவு, கடலில் திசை அறிய பயன்படுத்தப் படும் முறைகள் இதனை நன்கு புரிய உதவும்.

    காலம் என்பது நாமாக வகுத்துக் கொண்ட ஒரு அச்சு (dimension/axis). நிலநடுக் கோடுன்னு சொல்றோம் இல்லையா, அது மாதிரி. மத்தபடி காலம்னு ஒண்ணு இல்லை, இல்லவே இல்லை.

    துணைக் கேள்வி, ஓரளவு உருப்படியான ஒன்று. நம்மால் உணர முடியாததை உண்மை சமன் பாட்டின் அடிப்படையில் நிறுவலாம்.

    சிறந்த எடுத்துக்காட்டு, குவாண்டம் தியரி, ஒளியின் வேகத்தில் பயணப்படுவதன் விளைவுகள்.

    எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. பல்வேறு நிகழ்வுகளின், ஒப்பு நோக்குதலின் அடிப்படையில் அப்படித் தான் நம்புகிறேன். ஒரு அறிவியல் அறிஞர் இப்படிச் சொல்லி இருந்தார்.

    'அறிவியல் அண்டத்தின் தோற்றம் முதல் அனைத்தையும் விளக்கி விடலாம். ஆனால் எதற்காக அண்டம் தோன்ற வேண்டும் என்பதை விளக்க முடியாது'.

    இந்த பதில் அதன் காரணத்தை எப்படி வேண்டுமானாலும் விளங்கிக் கொள்ள வழி வகுக்கிறது.

    'உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.' கண்ணதாசன், எனக்குப் பிடித்த கவிசர்களுள் ஒருவர்.

  7. said...

    இணையம் குறைவான நேரம் மட்டுமே கிடைக்கிறது என்றால் நோட்பேடில் அடித்து பின்னர் பதிந்து விடுங்கள். இணையம் இல்லாதது உங்கள் கருத்தை மெருகூட்ட வாய்ப்பு தரும். ஆக்க சிந்தனையா (positive thinking) படலை?

  8. Anonymous said...

    //அப்படியே பேயென்று ஒன்று இருந்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்."//

    லோகம் போற போக்க பார்க்கையில, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பயங்கரமா இருக்குங்க.
    நீங்க சொல்லுறபடிதா ஆகீட்டிருகு.

  9. said...

    சொல்ல மறந்துட்டேன்.

    திரியை ரொம்பத் தூண்ட்டீங்களோ?

    இப்படிக் கொழுந்துவிட்டு எரியுது!

  10. said...

    I can't believe it is not butter. டேஷ்போர்டை திறந்து பார்த்தால் 4 பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுக்குக் காத்திருக்கின்றன.

    அன்புள்ள சிஜிஎஸ்,
    உங்களின் கடைசிப்பின்னூட்டத்திற்கு கொஞ்சம் விரிவாக பிறகு பதில் எழுதுகிறேன்.

    முகவைத்தமிழன்,
    தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். அப்படியானால் நான் வைத்த வாதங்கள் சற்று டொங்கல் போல் தெரிகிறது. இன்னும் சற்று தெளிவாக எழுதியிருக்க வேண்டும். பிறகு தெளிவாக ஒரு பின்னூட்டம் எழுதுகிறேன்

    //துளசி கோபால் said...
    சொல்ல மறந்துட்டேன்.

    திரியை ரொம்பத் தூண்ட்டீங்களோ?

    இப்படிக் கொழுந்துவிட்டு எரியுது!
    //

    டீச்சர் எதை சொல்றீங்கன்னு தெரியல. ஒருவேளை எனக்குத்தெரியாம சூடான இடுகைல வந்திருச்சோ?
    இல்லை என் அறிவுச்சுடர் கொழுந்துவிட்டு எரியுதுனு சொல்றீங்களா? மேல பாருங்க முகவைத்தமிழன் அதை உடைச்சு நொறுக்குறார்.

  11. Anonymous said...

    முகவை மைந்தன்,

    காலம் என்று ஒன்ரில்லை ..உண்மை.எனகாக தோன்றுயது இல்லைஇது தத்துவ ஞானிகளின் கூற்று.எல்லாம் மாயை..மாதிரி.jkrishnamurthy often says 'timelessness'. i could never understand his duscussions with the Physicist david bohm.

    ஆனாலும் அடிக்கடி ஒரு கேள்வி உண்டு.உடலுக்கு சில கால நிச்சயங்கள் உண்டு.உதாரணமாக ஒரு குழந்தை 10 மாதங்கள் தான் ஒரு தாயின் வயிற்றில் இருக்க முடியும்.ஓரிரு வாராங்கள் முன் பின் ஆகலாம்.. காலதாமதமானால் டாண் என்று உடல் தள்ளிவிடும்.
    இதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?

    enakku sindhikka mudindhadhu ivvaLavu thaan

  12. said...

    முகவை மைந்தன்,

    //நீங்கள் அளவிடும் பொருளின் நிலைத்தன்மை \ நம்பகத்தைப் பொருத்தது//

    அந்த நம்பகத்தன்மையை எப்படி அறிவீர்கள்? அதை எதனுடனாவது ஒப்பிட்டால்தானே அறிய முடிகிறது. அதாவது நேற்று இப்படி இருந்தது இன்றும் அப்படியே இருக்கிறது என்று எதனுடனாவது ஒப்பிட்டுத்தானே சொல்ல முடியும். அளவீடு என்பதே ஓர் ஒப்பீடுதானே? ஒப்பிடாமல் அறியக்கூடியது ஏதாவது இருக்கிறதா? இயற்பியல் தராசை சொல்கிறீர்கள். அதிலும் ஒப்பிட்டுத்தானே அளக்கப்படுகிறது.
    எனது இரண்டாவது கேள்வியில் தெளிவாகக் கேட்டிருப்பதாக நினைக்கிறேன். நீளம் என்பதை அளக்க அளவை ஒன்றுடன் ஒப்பிட்டுத்தான் அளக்கிறோம். அந்த அளவையை எப்படி நம்பினோம். அந்த அளவையை வேறொரு அளவையுடன் ஒப்பிட்டு சரிபார்த்திருக்கிறோம். இப்படியே ஒவ்வொரு அளவையாக பார்த்துக்கொண்டே வந்தோமானால் கடைசியாக மிஞ்சும் அளவை என்பது எதனுடனும் ஒப்பிடப்படாமல் இருக்கும். நான் இங்கே அளவை என்பதை வெறும் அரையடி ஸ்கேல் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை என்று புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    வளரும், வளராத என்பதில்லாத நம்பகத்தன்மைவாய்ந்த அளவை என்பது பல்வேறு சூழ்நிலைகளிலும், காரணிகளாலும் மாறாத ஒன்று என்பது உங்களுடைய கூற்று.
    பல்வேறு சூழ்நிலைகளிலும், காரணிகளாலும் மாறாதது என்பதைக்கூட ஒப்பிட்டுத்தானே அறிகிறோம் என்பது எனது கேள்வி.
    ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்முடைய அறிவானது எதையும் எதனுடனாவது ஒப்பிட்டே புரிந்துகொள்கிறது. கடவுள் என்பதையும் நாம் ஒப்பிட்டே புரிந்துகொள்கிறோம். கண்ணால் காண்பதெல்லாம், மற்ற புலன்களால் உணர்வதெல்லாம் சரியென்று நம்புகிறோம். இந்த நமது நம்பிக்கை ஒப்பீட்டினால் வருவது. அந்த ஒப்பீடு தவறாகவும் இருக்கக்கூடும்.
    அதனால் புலன்களால் உணர்வதுதான் உண்மையென்றோ புலன்களால் உணரமுடியாதவை பொய்யானவையென்றோ சொல்ல முடியாது என்பது என் வாதம். நீங்கள் மேற்கோளிட்ட அறிவியல் அறிஞரே "ஒப்பு நோக்குதலின் அடிப்படையில் அப்படித் தான் நம்புகிறேன்." என்றுதானே சொல்லியிருக்கிறார்.
    எந்த ஓர் அறிவியல் ஆராய்ச்சியும் ஒப்பிடுதல் மற்றும் ஒப்புநோக்குதலின் மூலமே நடைபெறுகிறது. மனிதனுடைய அறிவென்பது அவனுடைய முந்தைய அனுபவங்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது. நம்முடைய அனுபவங்களின் அடிப்படையில் இதுவரை இப்படி இருந்தவையெல்லாம் இனிமேலும் இப்படித்தான் இருக்கும் இதற்குமுன்னும் இப்படித்தான் இருந்தன என்ற முடிவுக்கு வருவதற்கு இதுவரை இப்படித்தான் இருந்தன என்னும் நம்முடைய அனுபவங்களே காரணம்.
    அண்டத்தின் தோற்றம், காலம், இறப்பிற்குப்பின் என்ன? என்பது போன்ற விசயங்களை அந்த அனுபவம் சார்ந்த அறிவின் மூலமே காணமுயல்கிறோம். அதுதான் கடவுள் இல்லையென்ற முடிவுக்கு நம்மைத்தூண்டுகிறது. அது முழுமையான முடிவல்ல என்பது என் கருத்து.
    ஏதாவது ஒன்று உருவாகியிருக்கிறதென்றால் அதற்கு யாரோ அல்லது எதுவோ காரணம் என்ற முடிவுக்கு நம்முடைய ஆராய்ச்சி அறிவு இட்டுச்செல்கிறது. யாரோ அல்லது எதுவோ காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை தானாகவே கூட உருவாகக்கூடும் என்பது ஆராய்ச்சிக்கு மேற்பட்ட சிந்தனை.
    அந்த "யாரோ அல்லது எதுவோ" அல்லது "தானாகவே" காரணமாக இருப்பதால் கடவுள் இல்லை என்று சொல்லலாம். அந்த "யாரோ அல்லது எதுவோ" அல்லது "தானாகவே" என்பதே கடவுளாக ஏன் இருக்கக்கூடாது அல்லது கடவுளாக ஏன் கருதக்கூடாது என்பது எனது வாதம்.
    என்னைப்பொறுத்தவரை கடவுள் என்று தனியாக எதுவும் இல்லை. அந்த எதுவுமில்லாததை அல்லது எல்லாவற்றையும் கடவுள் என்று சொல்வதில் தவறுமில்லை.

    கடவுள் இல்லைதான். ஆனால் சுடுகாட்டைத்தாண்டி சைக்கிளில் செல்லும்போது ஆதிபராசக்தியென்றோ ஸ்ரீராமஜெயம் என்றோ சொல்லிக்கொண்டுசெல்லும்போது ஆதிபராசக்தியோ ராமனோ என் சைக்கிளின் பின்கேரியரில் உட்கார்ந்து வருவதுபோல எனக்கு ஒரு நம்பிக்கை உண்டாகிறது. பயம் குறைகிறது. இந்தளவில்தான் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் எப்போதாவது கோயிலுக்குப்போகும்போது கொஞ்சம் திருநீறு நெற்றியில் பூசிக்கொள்கிறேன்.

    //ஏகப்பட்ட சங்கதிகளை எழுதி விட்டு அனைத்தையும் ஒரே கோட்டில், சார்பின் அடிப்படையில் விளக்க முயன்றுள்ளீர்கள்.//
    ஒப்பிட முடியாத சில சங்கதிகளை நம்முடைய ஒப்பிட்டு அறியும் அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. கடவுள் என்பதும் அப்படி ஒன்றுதான் என்று விளக்குவதற்காக அப்படி ஒப்பிட முடியாத சங்கதிகளை(அதாவது நான் அப்படி நினைக்கிறவற்றை) கேள்விகளாக எழுப்பி விளக்க முயன்றிருக்கிறேன். நான் நினைப்பதை தெளிவாக எழுதும் கலை(துளசி டீச்சர் கவனத்திற்கு, நான் சொன்ன நடை என்பது இதுதான்) எனக்கு இன்னும் வாய்க்காததால் இந்த இடுகை சற்று தெளிவில்லாமல் ஆகிவிட்டது. இந்த பின்னூட்டம் அதை சரி செய்யும் என்று நினைக்கிறேன்.

    சிஜிஎஸ்,
    சே மற்றும் இரமணரைப் பற்றி நான் அதிகம் எதுவும் போன இடுகையில் சொல்லவில்லை. அந்த இரண்டு புத்தகங்களையும் படித்தபின்னால் சே-வைப்பற்றி இருந்த சில எண்ணங்கள் மாறின. ஆனால் இரமணரை ஒரு தத்துவ ஞானியாக நினைத்து தத்துவ விளக்கங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து படித்தால் அந்த புத்தகத்தில் அவர் அற்புதங்கள் செய்யும் ஒரு தேவதையைப்போல வர்ணிக்கப்பட்டிருப்பது கொஞ்சம் அயர்ச்சியைத்தந்தது. அதைத்தான் நான் சொன்னேன்.
    பிரபாகரனை அடைப்புக்குறிக்குள் போட்டிருப்பதன் மூலம் என்னிடம் என்னுடைய ஈழத்தமிழர் போராட்ட ஆதரவு நிலைப்பாட்டை விமர்சிக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் அதிரடி அரசியலை விரும்பும் இளைஞர்களைப் போன்று விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை.
    எல்லா சராசரி இந்திய இளைஞர்களைப் போன்று எனக்கு சொல்லப்பட்ட இலங்கை பற்றிய விவரங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட சிந்தனைகள் உண்மைநிலைக்கு வெகுதொலைவில் இருப்பதாக உணர்ந்தேன். இதனால் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் எதிர்மறை ஈடுபாடு போன்றவையும் சில ஈழத்தமிழர்களின் கட்டுரைகளைப் படித்ததனாலும் இன்னும் சிலபல காரணங்களாலும் என்னுடைய தற்போதைய ஆதரவு நிலை அதுவும் மிக சமீப காலத்தில்தான் தோன்றியது. அதை ஒரு கட்டுரையாக எழுதும் எண்ணம் இருக்கிறது. விரைவில் எழுதுகிறேன்.

  13. said...

    //ஒப்பிட முடியாத சில சங்கதிகளை நம்முடைய ஒப்பிட்டு அறியும் அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. கடவுள் என்பதும் அப்படி ஒன்றுதான் என்று விளக்குவதற்காக//

    இப்ப கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கீங்க. நீங்கள் தந்த எடுத்துக் காட்டுகளை காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சின்னு வச்சுக்ககலாம். நான் சொல்ல விரும்பிய, பொருந்துமான்னு விட்டுட்ட இன்னொரு எடுத்துக் காட்டு சுஜாதா சொன்னது.

    பல்லிக்கு இட-வலம், மேல்-கீழ் (x-Y) அச்சு மட்டும் தான் தெரியும். அதனால் மூன்றாவது அச்சை (z-axis) உணர முடியாது. அது போல நம்மால் உணர முடியாத சங்கதி பல இருக்கலாம்.

    இனி நான். இப்ப, தரையில ஓங்கி மிதிக்கிறீங்க. தூசி கிளம்பி சிறிது நேரம் கழித்து அடங்குகிறது. இந்த மணித்துளியில் தூசி மற்றும் அதில் உள்ள பல நுண்ணுயிர்கள் பிறப்பெடுத்து அவற்றின் பல அண்ட வெளி சுழற்சிகள் முடிந்திருக்கலாம். நமக்கு மணித்துளி சில சூழ்நிலைகளில் அண்ட பிறப்பு, இறப்பே முடிந்து விடுகிறது. அவற்றுக்கு நம்மை உணர முடியாது. நம் அண்டம் யார் உதைத்ததோ?

    ஆமா, டாக்கியான்கள் பற்றி அறிந்திருக்கின்றீர்களா? தொடர்ந்து கேள்வி எழுப்புங்கள். நிறைய விவாதியுங்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் (சார்பு!)பிடிவாதமாய் தொடர வேண்டாம், அது நமது துறையில்லாத நிலையில்.

    பின்குறிப்பு: முந்தைய பின்னூட்டத்தில் 'ஒரு அறிவியல் அறிஞர் கீழ்வருமாறு சொல்லி இருந்தார்.' அப்படின்னு இருக்கணும். மத்த படி ஒப்பு நோக்கியது நான் தான்.

  14. said...

    சிஜிஎஸ், தாயினுள் வளரும் கரு தாயின் உடலைப் பொருத்த வரை ஒவ்வாத ஒன்று (foriegn paerticle/ கழிவு). எப்பொழுது தாங்க முடியாது என உணருகிறதோ அப்பொழுது தள்ளி விட வேண்டியது தான். சில குழந்தைகள் 7 மாதத்தில் பிறப்பதை அறிந்திருப்பீர்கள். ஒருவாரம் முன்ன, பின்ன அதனால் தான். மத்த படி டாண் என்றெல்லாம் பிறப்பதில்லை. எனக்குத் தெரிந்த வரை எந்த மருத்துவரும், கதைகளைத் தவிர, பிறப்பின் நேரத்தை முதல் நாள் கூட சொன்னதில்லை. பேறு காலம் பொதுவில் 9 மாதம் ஒரு வாரம் மட்டுமே, அதுவும் பெண்ணின் மாதவிடாய் துவங்கிய நாளில் இருந்து. நான் மருத்துவனில்லை, எனவே நான் சொன்னவற்றை அப்படியே எடுத்துக் கொள்வது உகந்தது அல்ல.

    இப்ப எடுத்துக் கொண்ட பொருளில் (context)பார்த்தால், நாம் கால சுழற்சியை வகுத்துக் கொண்ட அளவில் அது 9 மாதம், 1 வாரம் அவ்வளவே. நாம் செவ்வாயில் இருந்தால் இதே பேறு காலம் மிகக் குறைவான மாதத்தில் அடங்கும். ஆம், அங்கு ஆண்டு நம் உலகின் ஆண்டை விட நீண்டது.

    உமையணன், அடுத்த திரியைக் கொளுத்துங்கள், சரக்கிருந்தால் வருகிறேன்.