Friday, 20 February 2009

ஒளவையே ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி சுவற்றில் முட்டு.

 
 
 
 
 
 

Wednesday, 18 February 2009

தூசி படிந்த கண்ணாடி

சேரிகளை
வெள்ளைக்காரர்கள்
தேடிக்கொண்டிருப்பதில்லை
கண்டடைகிறார்கள்
நாம்
கண்டடைகிறோம்
தேடிக்கொண்டிருப்பதில்லை
 
###############################
 
இது
நம்முடையதைப் போல இல்லை
இங்கே
தாராவியுமில்லை
சந்த்ராயனுமில்லை

Sunday, 15 February 2009

உறவுகளே.........

என் அக்காள் மகன் 

தலைசிதறி செத்துக்கொண்டிருந்தபோது
என் பெரியப்பா 
நிலவுக்கு வின்கலம் விட்டுக்கொண்டிருந்தார்
நான் 
ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் தம்பி 
தீக்குளித்தான்.

Saturday, 7 February 2009

கண்கள் பனித்தன. இதயம் இனித்தது

ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் இதே இலண்டனில்  நண்பர்களுடன் தங்கி இருந்தபோது  நண்பன் ஒருவன்  கைலியை மடித்துக்கொண்டே சற்று மெதுவான் குரலில் என்னிடம் சொன்னான் "இலங்கைத்தமிழர்களுக்கு நம்ம ஓரளவுதான் ஹெல்ப் பண்ண முடியும். தெரியுதா?"  இதன் பொருள் எளிதானது. நான் இலங்கை செய்திகளை அதிக அக்கறையுடன் படிப்பது தவறென்கிறான். எனக்கு அறிவுரை சொல்கிறான். நான் அப்போது பதில் எதுவும் சொல்லவில்லை.
 
இப்போது அவன் சென்னையில் இருக்கிறான்.
 
கொஞ்ச நாள் முன்பு அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.  ஈழம் வரலாறு என்று தலைப்பிட்டு ஈழ வரலாறு குறித்த பிடிஎஃப் கோப்பு ஒன்று.  அதை வரலாறு முக்கியம் அமைச்சரே என தலைப்பிட்டு நான் ஒரு சுற்று அனுப்பினேன்.
 
இன்று அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். இலங்கையின் இன்றைய போர் நிலவரம் என்ன. புலிகள் வெல்வார்களா என்று கேட்டு. நான் தமிழ் சசியின் "கிளிநொச்சி ஒரு போரியல் பார்வை"யை அனுப்பி வைத்தேன். அதை TIFF கோப்பாக மாற்றி நிறைய பேருக்கு அனுப்பியிருக்கிறான். எனக்கும் ஒரு நகல் வந்தது.
 
எப்படி வந்தது அவனில் இந்த மாற்றம்?
 
தமிழ் சசியின் இடுகை ஒன்றிற்கு  நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். தமிழகத்தமிழர்களை அக்கறை கொள்ள வைக்க புலி ஆதரவெல்லாம் கோசமெல்லாம் தேவையில்லை. செய்திதான் இப்போதைய தேவை. அந்த மக்கள் படும் துன்பங்களைப் பற்றிய செய்தி மட்டுமே போதும்.  அதை சுவரொட்டிகள் மூலமோ அல்லது துண்டு பிரசுரங்கள் மூலமோ செய்ய்லாமென்று. அதையே சமீபத்தில் கதிர் சயந்தனும் சொல்லியிருந்தார்.   இப்போது அதுதான் நடந்திருக்கிறது. சற்று தாமதாகவென்றாலும்.
 
ஏனென்றால் ஒரு படுகொலை(வங்காலை) செய்தியை தற்செயலாக இணையத்தில் படிக்கப்போய்தான் நான் இலங்கை விவகாரங்களில் ஆர்வம் காட்டத்தொடங்கினேன். பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். முற்றிலும் தலைகீழான ஒரு கருத்துநிலைக்கு வந்தேன்.

Friday, 6 February 2009

இந்தியில் மொழிமாற்றம் வேலைசெய்கிறது. தமிழுக்கு எப்போது?

Saturday, 20 December 2008

என் மதர்டங் தமிழ்-2

முன்பு இலண்டனுக்கு வந்த புதிதில் நண்பர்கள் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். நாங்களேதான் சமையல். ஒருநாள் நாங்கள் கடைத்தெருவில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தோம். ஒரு காய்கறிக்கடை கல்லாவில் இருந்தவன் எங்களிடம் கேட்டான்.

"நீங்கள் தென்னிந்தியர்கள்தானே?"

"ஆம்"

"நீங்கள் தென்னிந்தியர்கள் என்று நான் சொன்னேன். இல்லை இலங்கைத்தமிழர்கள் என்று இவன் சொன்னான். கடைசியில் நான் சொன்னதுதான் சரியாக இருந்தது" என்றான் பக்கத்திலிந்தவனைக்காட்டி.

நண்பர்களில் ஒருவர் அவனிடம் கேட்டார் "நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்".

"இல்லை நாங்கள் இந்தியர்கள் இல்லை. பாகிஸ்தானியர்கள்"

Friday, 19 December 2008

என் மதர்டங் தமிழ்-1

நான் சென்னைக்கு புதிதாக அப்போதுதான் வந்து புதிய வேலை ஒன்றை தேடி கண்டடைந்திருந்தேன். எனது நிறுவனத்தில் தயாரிக்கும் கருவி ஒன்றிற்கான சில பொருட்களை ஒரு கடைசல் பட்டறையில் கொடுத்திருந்தார்கள். நான் அதனை மேற்பார்வை செய்து முடிந்தபின் வாங்கி வரவேண்டும்.

ஆல் சைக்கிள் ரிப்பேர்ஸ் டன் ஹியர் என்று ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட கடைக்கு அருகில் அந்த பட்டறை இருந்தது. அங்கு போனதில் இருந்தே எனக்கும் அந்த பட்டறைக்காரருக்கும் பேச்சு வார்த்தையில் சில சலசலப்புகள் இருந்தன. கடைந்து முடிந்தபின் அவர் ராவிக்கொண்டிருந்தார். நான் வெகுநேரமாக பேசாமலேயே இருந்தேன். அது என் இயல்பு. பின் நான் பட்டறை வாசல் வழியாக தெருவைப் பார்த்தேன். தெருவெங்கும் நிறைய பூசணிகள் உடைக்கப்பட்டிருந்தன. ஏதாவது பேசலாமென அவரிடம் கேட்டேன்.
 
"இன்னைக்கு என்ன விசேசம்? தெருவெல்லாம் பூசணிக்கா ஒடச்சிருக்காங்க."
 
அவர் நிமிர்ந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பின் கேட்டார்.
 
"ஒங்க மதர் லாங்வேஜ் என்ன?"
 
"தமில்தான் ஏன் கேட்குறீங்க?" என்றேன் நான்.
 
"இன்னிக்கு அமாவாசை. பின்ன ஒடைக்க மாட்டாங்களா? இதுகூட தெரியாதக்குறீங்க."

 "இல்ல. எங்க ஊர்ல அமாவாசைக்கு தெருவுல பூசணிக்காயெல்லாம் ஒடைக்க மாட்டோம்."