Sunday 30 December 2007

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

அசைவ உணவுகளை குறைத்துக்கொள்ளத்தான் நினைக்கிறேன். முடியவில்லை. இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது. இப்படி சிந்தனை ஓடிக்கொண்டிருந்தபோது சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன் ஒருவனுடன் செய்திருந்த வாக்குவாதம் நினைவுக்கு வந்தது. அதை இப்போது பொதுப்பார்வைக்கு வைக்கிறேன்.

முதல்முறை இலண்டன் வந்தபோது நாங்கள் ஐந்துபேர் தனியாக ஒரு வீடு எடுத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்। அதில் இரண்டுபேர் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள். மற்ற மூன்று பேரும் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள். அப்போது ஒன்றாக சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த சைவம் சாப்பிடும் நண்பன் அவனருகிலிருந்த அசைவ பாத்திரத்தை என்னை நகர்த்தி வைக்க சொன்னான். அதன் பொருள் புரியக்கூடியதே. நான் கையை நீட்டி நகர்த்தி வைத்துக்கொண்டே மெதுவாகக்கேட்டேன்.

நீ ஏன் அசைவம் சாப்பிடுவதில்லை?

நாங்களெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமில்லை?

அதான் ஏன்னு கேட்கிறேன். ஏன் உயிரைக் கொல்ல விருப்பம் இல்லையா?

ஆம். அதுவும் ஒரு காரணம்.

ஒரு மாட்டை அடித்து குறைந்தது நான்கு பேர் சாப்பிடலாம். அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர். பல ஆயிரம் உயிர்களின் உயிரைக்கொன்று உன் ஒரு வேளை சாப்பாட்டை உட்கொள்கிறாய்.

நெல் பயிராய் வளர்ந்தால்தான் அது உயிர். வெறும் நெல் உயிரல்ல.

உயிரில்லாத பொருளிலிருந்து உயிர் தோன்றுவதில்லை. ஒவ்வோர் உயிரின் உணவும் ஓர் உயிர்தான். உயிரில்லாத பொருட்களை உணவாக உட்கொள்ளும் உயிர்கள் உலகில் இல்லை.

எனக்கு அதன் சுவை பிடிப்பதில்லை.

சுவைத்துப் பார்த்திருக்கிறாயா?

இல்லை. எனக்கு அதன் மணம் பிடிப்பதில்லை. அதனால் அது சுவையாக இருக்குமென்று தோன்றவில்லை.

நல்ல மணமாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடுவாயா?

இந்த பேச்சை விடு. எனக்கு அசைவம் சாப்பிடுவதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. வாந்தி வருகிறது.

எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும் எங்கள் மனத்தை புண்படுத்தும் என்று உனக்குத்தோன்றவில்லையா? அது அருவருப்பானது என்று உனக்கு யாரும் சொல்லவில்லையா?

19 பின்னூட்டங்கள்:

  1. said...

    :-)
    அந்த அருவருப்பை நானும் இப்படியெல்லாம்

    சப்பை கட்டி இருக்கிறேன்!
    :-)

  2. said...

    டெச்ட்

  3. said...

    ஜீவா,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்கள் இடுகைகளையும் படித்தேன்.

    புலால் உண்பது

    1. செரிமானத்திற்கு கடினமானது-ஆனால் நாம் உண்ணும் எல்லாவகையான சைவ உணவுகளும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை அல்ல. செரிப்பதற்கு கடினமான சைவ உணவுகளும் இருக்கின்றன.

    2. புலால் உணவுகளில் உடலுக்குத்தேவையான சத்துக்கள் இல்லை - சில புலால் உணவுகள் காட்டாக மீன், பால், முட்டை போன்றவை உடல்நலத்துக்குத் தேவையான உணவுகள். அதே சமயம் உடல்நலத்துக்குத் தேவையில்லாத சைவ உணவுகளும் நிறைய இருக்கின்றன.

    நீங்கள் சொன்னக் காரணங்களுக்காக புலால் உண்பதை தவிர்ப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் புலால் உணவுகளையும் உண்பவர்களையும் கேவலமாக பார்ப்பது நம்மிடையே நிலவுகிறது. அதை விமர்சிப்பது இந்த இடுகையின் சில நோக்கங்களில் ஒன்று.

  4. said...

    //ஆனால் புலால் உணவுகளையும் உண்பவர்களையும் கேவலமாக பார்ப்பது நம்மிடையே நிலவுகிறது. //
    நீங்கள் சொல்வதும் சரிதான். ஒருவர் தனக்குத்தானே இட்டுக்கொள்ளும் நியதிகளைக் கொண்டு, அதை பின்பற்றாத இன்னபிறரை கேவலமாக பார்ப்பது தவறுதான்.
    புலால் உண்வர்களும், புலால் தவிர்பவரை கிண்டல்-கேலி செய்வதும் சாதாரணமாக நாம் பார்ப்பதுதான்.

  5. said...

    // எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும் எங்கள் மனத்தை புண்படுத்தும் என்று உனக்குத்தோன்றவில்லையா? அது அருவருப்பானது என்று உனக்கு யாரும் சொல்லவில்லையா? //

    சரியான கேள்வி. :)

  6. said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்வண்டு.

    ஜீவா,

    புலால் உண்ணாதவர்களை, உண்பவர்கள் கிண்டல் செய்வது உண்மைதான். ஆனால் இரண்டையும் ஒப்பிடுவது எனக்கு சரியாக தோன்றவில்லை. புலால் உண்பவர்களைவிட தாங்கள் உயர்வானவர்கள் என்று நினைக்கும் போக்கு, அவர்கள் வீட்டிற்கு புலால் சமைக்காத நாட்களில் கூட போக விரும்பாத மனநிலை போன்ற செயல்களை கிண்டலடிப்பதுடன் ஒப்பிட முடியாது.

    நான் வாதம் செய்த நண்பன் சைவ உணவகங்களில் உணவுக்குப்பின் கொடுக்கப்படும் சோம்பைக்கூடத் தவிர்ப்பவன். கேட்டால் அது அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் பொருள் என்பான். அவன் அப்படி செய்வது தான் ஆச்சாரமானவன் (பார்ப்பனன் அல்லன்) என்ற சுய திருப்திக்காக செய்து கொள்வதுதான். இது போன்று பொய்யாய் நாமே உருவாக்கிக்கொள்ளும் பெருமிதங்கள்தான் மற்றவர்கள் மீதான தாழ்வான எண்ணங்களுக்கும் வெறுப்புக்கும் காரணம் என்பது என் பணிவான கருத்து.

  7. said...

    கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை! இதை நான் சொல்லல!! கவுண்டமணி அண்ணன் சொன்னது!! :)

  8. said...

    //எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும் எங்கள் மனத்தை புண்படுத்தும் என்று உனக்குத்தோன்றவில்லையா? அது அருவருப்பானது என்று உனக்கு யாரும் சொல்லவில்லையா?//


    இதை அவர்கள் நன்கு புரிய வேண்டும்.

    இதேவேளை இவர்கள் சைவம்
    எனக் கருதி உண்னும் பல உணவுகளில் அசைவக்கலப்பு உண்டு.
    குறிப்பாக பிஸ்கட்,சாக்கலட்.

    பிறப்பால் சைவம் சாப்பிடுவோர்,என்போர் ,சிலர் மறைவில் எல்லாம் சாப்பிடுவோராகவும், மது அருந்துபவர்களாகவும் இருப்பதும்
    இலைமறை காய்மறையாக நடக்கிறது.

    மேசையில் தள்ளி வைத்தவர், விமானத்தில் இவர் உணவும்,நம் உணவும் ஒரே குளிர் பெட்டியில்
    இருந்ததை அறிவாரா??

    இவர்கள் ஒருவகை மனவியாதி பிடித்தோர்.
    சாப்பிடுவது எதென்பதல்ல பிரச்சனை,எப்படி மனித சமுதாயத்தில்
    வாழ்கிறோம் என்பதே பிரச்சனை.
    கிணற்றுத் தன்ணீர் தான் குடிப்பேன், அதில் தான் பூசை வைப்பேன் என்ற
    சைவம் தான் சாப்பிடுகிறேன் என்ற மடவாசியின் கைங்கரியம்
    நாம் மறக்கவில்லை.
    எதையும் அளவுடன் சாப்பிடலாம்.

  9. said...

    என் பங்குங்குக்கு,

    புலால் உண்ணுவது பாவமோ / புண்ணியமோ சார்ந்ததல்ல... மாறாக விலங்குகளும் ஒரு உயிர்... அறுக்கும் போது நிச்ச்சயம் துடிக்கும்... என்பதால் அவற்றை தவிர்க்கச் சொல்லுவது, அனைத்து உயிர்கள் மீதான அன்பு சார்ந்த உணர்வு கொள்ளச் சொல்வது மட்டுமே.

  10. said...

    சைவ உணவின் தாத்பரியம் மதரீதியானதோ,சமய ரீதியானதோ அல்ல;அது அன்பின் வழி வந்தது.
    தன் இருப்புக்காக,வாழ்வுக்காக இன்னொரு உயிரைக் கொல்லக் கூடாது என்ற என்ற உலகலாவிய அன்பின் வழி வரும் நெறியே,சைவநெறி.சாதாரணமாக தன் உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,எனவேதான் வள்ளுவர்
    தன்னூன் தான்பெருக்க மற்றுயிரைக் கொல்வானை எங்ஙணம் ஆளும் அருள்? எனக் கேட்டார்.
    மற்ற உயிரைக் கொல்லும் ஒரு மனிதனிடம் அருள் இருக்கமுடியாது என்ற பொருள்.
    /////////
    அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர்
    ///////////
    எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே ஒழிய மனத்தின் பாற்பட்ட வாதமல்ல.
    நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.
    அவற்றின் வாழ்க்கை முறையும் மனித உயிரின் வாழ்க்கை முறையை ஒத்தது;அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;அவற்றின் வாழ்வும் அன்பும்,துயரும் மனித உயிரைப் போலவே வெளிப்படையானவை.
    ஒரு நெற்பயிர் இன்னொரு நெற்பயிருடன் காதல் புரிந்து,குழந்தை நெற்பயிரை உருவாக்குவதில்லை;மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,எனவே இயற்கையின் அமைப்பில் அவை 'உண்மையான' உயிர்களின் - ஆடு,மாடு மற்றும் மனிதன் போன்ற உயிர்கள் உட்பட- உணவுக்காகப் படைக்கப்பட்டவை.
    அவையும் உயிர்தான்,அவற்றைக் கொன்றுதான் நீ தின்கிறாய் என்பது,புலால் உண்பவர்களின் நொண்டிச் சாக்கு.
    /////////
    எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும்
    /////////
    புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.
    தெருவில் வண்டியில் அடிபட்டு, ரத்தமும் சதையுமாக அரைந்து கிடக்கும் ஒரு உயிரியின் பால் வரும் அருவருப்பே,சைவ உண்வாளி புலாலைப் பார்த்தால் வரும் அருவருப்பு...அது புரிந்து கொள்ளப் பட வேண்டியதே...
    //////////
    இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது.
    ////////////

    இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.
    90 களின் கடைசியில் நான் சவூதி அரேபியாவில் இருந்தபோது கூட நான் சைவ உணவாளியாக வாழ முடிந்தது;சவூதியிலேயே வாழ முடியும் போது லண்டன் போன்ற நகரில் முடியாது எனச் சொல்வதும் நொண்டிச் சாக்கின் பாற்பட்டதே.

    மற்ற செரிமானம் தொடர்பான வாதங்கள் கவைக்குதவாதவை.

  11. said...

    டிஸ்கி:
    ///////////
    அவன் அப்படி செய்வது தான் ஆச்சாரமானவன் (பார்ப்பனன் அல்லன்) என்ற சுய திருப்திக்காக செய்து கொள்வதுதான்
    ///////////

    பிராமணர்கள் தான் சைவ உணவாளிகள்,ஆசாரமானவர்கள் எனச் சொல்வதும் ஒரு மாயையே..
    சாம,அதர்வண வேதங்களில் யாக முறைகளில் கன்றீன்ற பசுவின் மடியை(பால் காம்புகளை) அரிந்து வேள்வி செய்யும் முறைகளை விவரிக்கும் கொலைகாரப் போக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது..

    /////////
    சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன்..
    /////////

    அதில் பெருமை இருந்தால் புரிந்துகொள்ளப் பட வேண்டியதே அன்றி,இகழ்ந்து பேசப்பட வேண்டிய ஒன்றல்ல.

  12. said...

    குட்டிப்பிசாசு, யோகன் பாரீஸ் (johan-paris), கோவி.கண்ணன், அறிவன் தங்கள் அனைவரின் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    யோகன் பாரீஸ் (johan-paris),

    //மேசையில் தள்ளி வைத்தவர், விமானத்தில் இவர் உணவும்,நம் உணவும் ஒரே குளிர் பெட்டியில்
    இருந்ததை அறிவாரா??//

    இது போன்ற ஒரு உதாரணத்தைச்சொல்லி அவனிடம், பிறகு எங்களுடன் தங்க சம்மதித்தாய் என்று கேட்டேன். வேறென்ன செய்ய சகித்துக்கொண்டிருக்கிறேன் என்றான். நாங்களும் வேறென்ன செய்ய சகித்துக்கொண்டோம்.

    கோவி.கண்ணன்,

    உங்கள் இடுகையையும் படித்தேன். உங்களுக்கே உரிய பாணியில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    அறிவன்,

    //உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,//

    இப்படி எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உலகில் புலால் உண்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அவர்கள் அனைவரும் அன்பில்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா?

    //எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே//

    இது விதண்டாவாதமா? இல்லை

    //நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.//

    இது விதண்டாவாதமா? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

    //அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;//

    நான் அடிக்கடி வேடிக்கையாக சொல்வதுண்டு. மான், மயில் போன்ற உயிரினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மனிதன் அவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டுமென்று. நீங்கள் பார்த்தீர்களானால் ஆடும், கோழியும் மானையும் மயிலையும் போன்றவைதான். இந்த புவியில் மனிதன் இருக்குமட்டும் அவற்றுக்கு அழிவென்பது இருக்க வாய்ப்பில்லை.

    //மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,//

    இயற்கையாக நெற்பயிர் வளரமுடியாது என்கிறீர்களா?

    //புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.//

    இதிலென்ன ஈகோ இருக்கிறது. அருவருப்பாக இருக்கிறது, வாந்தி வருகிறது என்று சொல்லப்படும்போது அது மனதைத் தைத்தாலும் புலால் உண்பவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள். அதற்காக சில விட்டுக்கொடுத்தல்களையும் செய்கிறார்கள். அருவருப்பாகப் பார்ப்பது அநாகரிகமானது என்று சொல்கிற ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :))

    //இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.//

    ஒத்துக்கொள்கிறேன். காந்தியால் இதே இலண்டனில் அதுவும் அந்த காலத்திலேயே முடிந்திருக்கிறது.

  13. said...

    >>>>>>>>>>>>
    //உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,//

    இப்படி எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உலகில் புலால் உண்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அவர்கள் அனைவரும் அன்பில்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா?

    >>>>>>>>>>>>>

    மற்றொரு உயிரின் மேல் அன்பிருக்கும் போது அதைக் தன் உணவுக்காக கொல்லத் துணிந்தால்,'உன் மேல் எனக்கு மிக அன்பு அதனால்தான் உன்னைக் கொல்கிறேன்' என கருதச் சொல்வீர்களா????

    >>>>>>>>>>>>>
    //எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே//

    இது விதண்டாவாதமா? இல்லை

    //நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.//

    இது விதண்டாவாதமா? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
    >>>>>>>>>>>>>>

    நீங்களே அமைதியாக சிந்தியுங்கள் !!!

    >>>>>>>>>>>
    //அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;//

    நான் அடிக்கடி வேடிக்கையாக சொல்வதுண்டு. மான், மயில் போன்ற உயிரினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மனிதன் அவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டுமென்று. நீங்கள் பார்த்தீர்களானால் ஆடும், கோழியும் மானையும் மயிலையும் போன்றவைதான். இந்த புவியில் மனிதன் இருக்குமட்டும் அவற்றுக்கு அழிவென்பது இருக்க வாய்ப்பில்லை.
    >>>>>>>>>>>>>>

    நான் சொல்வது அவற்றின் வாழ்க்கை முறை பற்றி...
    அவற்றை கொன்று தின்பதால் அந்த இனங்கள் பூமியில் இல்லாமல் போய்விடக் கூடும் என்பது என் வாதமல்ல...மீண்டும் நான் எழுதியதைப் படியுங்கள்....

    >>>>>>>>>>>>>
    //மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,//

    இயற்கையாக நெற்பயிர் வளரமுடியாது என்கிறீர்களா?
    >>>>>>>>>>>>>>

    யாராவது விவசாயம் செய்பவரை அறிந்திருந்தால் கேளுங்கள்,சொல்லுவார்..
    அதற்கு முன் நாற்றுக்கும் நெற்பயிருக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்...

    >>>>>>>>>>>
    //புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.//

    இதிலென்ன ஈகோ இருக்கிறது. அருவருப்பாக இருக்கிறது, வாந்தி வருகிறது என்று சொல்லப்படும்போது அது மனதைத் தைத்தாலும் புலால் உண்பவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள். அதற்காக சில விட்டுக்கொடுத்தல்களையும் செய்கிறார்கள். அருவருப்பாகப் பார்ப்பது அநாகரிகமானது என்று சொல்கிற ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :))
    >>>>>>>>>>>>

    நீங்கள் மனதைத் தைக்கிறது என்கிறீர்கள்,நான் ஈகோ என்கிறேன்.

    >>>>>>>>>>>>
    //இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.//

    ஒத்துக்கொள்கிறேன். காந்தியால் இதே இலண்டனில் அதுவும் அந்த காலத்திலேயே முடிந்திருக்கிறது.
    >>>>>>>>>>>>>>

    That's the Spirit...

  14. said...

    அறிவன்,
    உங்கள் மறுமொழிக்கு பிறகு பதில் எழுதுகிறேன்.

  15. said...

    /மற்றொரு உயிரின் மேல் அன்பிருக்கும் போது அதைக் தன் உணவுக்காக கொல்லத் துணிந்தால்,'உன் மேல் எனக்கு மிக அன்பு அதனால்தான் உன்னைக் கொல்கிறேன்' என கருதச் சொல்வீர்களா????//

    சரி எல்லோரும் அன்பானவர்களாக சைவ உணவு உண்பவர்களாகவே மாறிவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மனிதர்கள் நாம் எந்த உயிரையும் கொல்லவே மாட்டோமா? உணவுக்காக கொல்வதுதான் தவறு என்கிறீர்களா?


    //>>>>>>>>>>>
    //அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;//

    நான் அடிக்கடி வேடிக்கையாக சொல்வதுண்டு. மான், மயில் போன்ற உயிரினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மனிதன் அவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டுமென்று. நீங்கள் பார்த்தீர்களானால் ஆடும், கோழியும் மானையும் மயிலையும் போன்றவைதான். இந்த புவியில் மனிதன் இருக்குமட்டும் அவற்றுக்கு அழிவென்பது இருக்க வாய்ப்பில்லை.
    >>>>>>>>>>>>>>

    நான் சொல்வது அவற்றின் வாழ்க்கை முறை பற்றி...
    அவற்றை கொன்று தின்பதால் அந்த இனங்கள் பூமியில் இல்லாமல் போய்விடக் கூடும் என்பது என் வாதமல்ல...மீண்டும் நான் எழுதியதைப் படியுங்கள்....//

    எனக்கு எழுதும்போதே தெரியும். உங்கள் கருத்துக்கு இது நேரடி பதிலாக இருக்காது என்று. இருந்தாலும் எனது நல்ல சிந்தனையை(?) நுழைக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று நுழைத்து விட்டேன். ஆனாலும் இது முற்றிலும் உங்கள் வாதத்துக்கு சம்மந்தமில்லாதது என்று நான் நினைக்கவில்லை. கொஞ்சம் தூரத்தில் சம்மந்தம் இருக்கிறது. நாம் அவற்றை சாப்பிடுவதனால்தான் அதிக அளவில் வளர்த்து, அழிந்து விடாமல் காப்பாற்றி அதிக எண்ணிக்கையில் காதல் செய்ய விடுகிறோம். சரி இதுவும் உங்களுக்கு திருப்தி தராது என்று நினைக்கிறேன். எது எப்படியோ அசைவம் சாப்பிடாதவர்கள் அன்பில்லாதவர்கள் என்ற உங்கள் கருத்தும் அதற்கு நீங்கள் வைத்த வாதமும் என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

    ////மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,//

    இயற்கையாக நெற்பயிர் வளரமுடியாது என்கிறீர்களா?
    >>>>>>>>>>>>>>

    யாராவது விவசாயம் செய்பவரை அறிந்திருந்தால் கேளுங்கள்,சொல்லுவார்..
    அதற்கு முன் நாற்றுக்கும் நெற்பயிருக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்...//

    எனக்கு விவசாயம் தெரியாது. ஒத்துக்கொள்கிறேன். சரவண பவன் ஓட்டல் சர்வர் கேட்கும் பச்சரிசி சாதமா, புழுங்கலரிசி சாதமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்குக் கூட எனக்கு நெல், அரிசி, நெற்பயிர், நாற்று இவற்றைப்பற்றி தெரியாது. ஆனாலும் அதற்காக நெல்லுக்கு உயிர் இல்லை என்று சொல்ல முடியுமா? கோடவுனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டையில் முளை விட்டதாக புகைப்படத்துடன் செய்தி படித்த நினைவிருக்கிறது. அது எப்படி? நெல்லுக்கு உயிரில்லையென்றால் நாற்றுக்கு உயிர் எங்கிருந்து வருகிறது?

    //நீங்கள் மனதைத் தைக்கிறது என்கிறீர்கள்,நான் ஈகோ என்கிறேன்.//

    மனதை தைப்பதும் ஈகோவும் ஒன்று என்று சொல்கிறீர்களா? மனதை தைப்பதனால் ஈகோ தூண்டிவிடப்படலாம். ஆனால் மனதை தைப்பது ஈகோவாக முடியாது. அவ்வாறு மனதை தைக்கும் வார்த்தைகளும், நடத்தைகளும்தான் அநாகரீகமானவை என்று நான் சொல்கிறேன். குளியலறையில் தும்மினால் கூட எக்ஸ்க்யூஸ் மீ என்ற சொல்கிற நாகரீகம் இந்த விசயத்தில் இல்லை என்றுதான் நான் சொல்கிறேன்.

    // That's the Spirit...//

    நன்றி.

  16. said...

    I think all your reply has hollowness.
    Based on my psychotic reading of your writing ,I guess you accept my points but just want to argue..
    :-)

  17. said...

    இல்லை. நிஜமாகவே உங்கள் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    இந்த புள்ளிக்கு மேல் இந்த விவாதம் நகராது என்றே தோன்றுகிறது.

    சரி உங்கள் கருத்து உங்களுக்கு எனது கருத்து எனக்கு. தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

  18. said...

    அருமையான பதிவு...சாதாரணமாக இருவருக்கிடையே நிகழும் உரையாடலில் மேம்பட்ட கருத்தை உணர்த்தியுள்ளீர்...இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு..."ஒரு கோழியைக் கொன்று நான்கு பேர் சாப்பிடலாம்..ஆனால் ஒருவர் கீரை உண்ண குறைந்தது 25 கீரைகளை கொல்ல வேண்டும்" என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு..(ஆனால் நீங்கள் குறிப்பிட்டதை போல் ஓரு மாட்டிற்கு நான்கு பேர்களெல்லாம் ஓவர்ப்பா..அவாளெல்லாம் நம்மைப்பற்றி என்ன நினைப்பா..)
    ஆனால் அருவருப்பு விசயத்தை நான் யோசித்ததில்லை...ஒரு விசயம் உமையணன், நாம் காய், கறி சாப்பிடுகிறோம்...அவாள் காய் மட்டும் தானே சாப்பிடுறா பின்னே ஏன் நாங்க காய்கறி சாப்பிடுறோம், காய்கறி சாப்பிடுறோம்னு சொல்றாள்..?

  19. said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீழை ராஸா